July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அவுஸ்திரெலியாவில் நிர்க்கதியான பிரியா – நடேஸ் குடும்பத்திற்கு தற்காலிக வீசா வழங்கப்பட்டது

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த பிரியா – நடேஸ் குடும்பத்தினருக்கு பேர்த் நகரில் தங்கி இருப்பதற்கான தற்காலிக இணைப்பு வீசா வழங்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரெலியாவின் குடிவரவுத்துறை அமைச்சர் அலெக்ஸ் ஹவ்க் இவர்களுக்கு வீசா வழங்கப்பட்டுள்ளமை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதன்படி பிரியா, நடேஸ் மற்றும் அவர்களின் பிள்ளைகள் இருவருக்கும் 3 மாதங்கள் பேர்த் நகரில் தங்கி இருப்பதற்கான இணைப்பு வீசா வழங்கப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லாந்தில் பிலோயீலா என்ற இடத்தில் வசித்துவந்த பிரியா- நடேஸ் தம்பதியினரின் வீசா காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து அவர்களின் இரண்டு மகள்களுடன் அவர்கள் 2018 ஆம் ஆண்டில் மெல்பர்ன் தடுப்பு முகாமுக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

இந்நிலையில் அதற்கு எதிராக எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளின் நிமித்தம் வழக்கு விசாரணை வரையில் கிறிஸ்மஸ் தீவில் உள்ள முகாமொன்றில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.

இதன்போது அவர்களது இரண்டாவது மகள் தருணிகா சுகவீனமற்று பேர்த் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனை கருத்திற்கொண்டு பிரியா – நடேஸ் குடும்பத்தினருக்கு 3 மாதங்களுக்கு பேர்த்த நகரில் தங்கியிருப்பதற்காக தற்காலிக வீசா வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த வீசாவின் மூலம் சுகாதாரம், வீடு, தொழில் வசதிகள் அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் குடிவரவுத்துறை அமைச்சர் அலெக்ஸ் ஹவ்க் தெரிவித்துள்ளார்.