பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் கொன்பிலான் சென் தொனரினே என்ற புறநகர்ப் பகுதியில் ஆசிரியர் ஒருவரின் தலையை துண்டித்து கொலை செய்த நபரை பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர்.
வெள்ளிக்கிழமை, உள்ளூர் நேரப்படி மாலை 5 மணியளவில் நடந்துள்ள இந்த சம்பவத்தை ‘இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதல்’ என அந்நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நபிகள் நாயகத்தின் சில கேலிச் சித்திரங்களை வகுப்பில் மாணவர்களுக்கு காட்டி, கருத்துச் சுதந்திரம் பற்றி கற்பித்த வரலாற்றுப் பாட ஆசிரியரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
கத்தியோடு நின்றுகொண்டிருந்த கொலையாளியை பொலிஸார் கைது செய்ய முயன்ற போது அவர் தப்பியோடியுள்ளார்; அப்போது அவரை பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பாரிஸ் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன், “கருத்துச் சுதந்திரத்தை போதித்தமைக்காக” ஆசிரியர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பிரெஞ்சு நையாண்டி இதழான சார்லி எப்தோ மீது 2015-ம் ஆண்டில் நடத்தப்பட்ட இஸ்லாமிய தாக்குதல் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் நடந்துவரும் சூழலில் இந்த சம்பவம் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.