July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தடுப்பூசியைப் புறக்கணிப்போரை சிறையில் அடைப்பதாக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி எச்சரிக்கை

கொரோனா தடுப்பூசியைப் புறக்கணிப்போரை சிறையில் அடைப்பதாக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிலிப்பைன்ஸின் பல்வேறு தடுப்பூசி நிலையங்களிலும் தடுப்பூசி பெற்றுக்கொண்டோரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதன் காரணமாகவே, ஜனாதிபதி இவ்வாறு எச்சரித்துள்ளார்.

கொரோனா தொற்றால் மோசமாகப் பாதிக்கப்பட்ட ஆசிய நாடாக பிலிப்பைன்ஸ் காணப்படுகிறது.

‘நீங்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாவிடின், நான் உங்களை சிறையில் அடைப்பேன்’ என்று தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது, தெரிவித்துள்ளார்.

தடுப்பூசியை சுய விருப்பின் கீழ் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சுகாதாரத்துறையின் வலியுறுத்தலுடன் ஜனாதிபதியின் எச்சரிக்கை முரண்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிலிப்பைனில் 1.3 மில்லியன் பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன் 23 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

‘நான் கூறுவதை தவறாக எடுக்க வேண்டாம். இந்த நாட்டில் நெருக்கடி நிலை தொடர்கிறது.

பிலிப்பைன் மக்கள் அரசாங்கத்துக்கு செவிசாய்ப்பதில்லை என்ற காரணத்தினாலேயே நான் கோபப்படுகிறேன்’ என்றும் ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடர்ட் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் 70 மில்லியன் பேருக்கு தடுப்பூசி வழங்க திட்டமிட்டுள்ள நிலையில், 2.1 மில்லியன் பேரே தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளதாகவும், தடுப்பூசி ஏற்றத்தில் காலதாமதம் நிலவுவதாகவும் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.