உலக சுகாதார ஸ்தாபனம் முன்னெடுத்து வரும் கோவெக்ஸ் திட்டத்திற்கு கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
வறிய நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை விநியோகிக்கும் கோவெக்ஸ் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
கோவெக்ஸ் திட்டத்திற்கு போதியளவு தடுப்பூசிகள் கிடைக்கப் பெறவில்லை என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் சிரேஷ்ட ஆலோசகர் புரூஸ் அய்வர்ல்ட் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் கோவெக்ஸ் திட்டத்தின் கீழ் இதுவரையில் 131 நாடுகளுக்கு 90 மில்லியன் தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
வளர்ச்சியடைந்த நாடுகள் தேவைக்கு அதிகமான தடுப்பூசிகளை சேமித்து வைத்திருப்பதே, தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு காரணம் என்று உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.
தேவைக்கு அதிகமாக தடுப்பூசிகளை சேமித்து வைப்பதைத் தவிர்த்து, அவசியமான நாடுகளுக்கு விநியோகிக்குமாறு உலக சுகாதார ஸ்தாபனம் கேட்டுக்கொண்டுள்ளது.