July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஈரான் ஜனாதிபதித் தேர்தலில் இப்ராஹிம் ரய்ஸி வெற்றி

ஈரானின் புதிய ஜனாதிபதியாக இப்ராஹிம் ரய்ஸி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியாக இருந்த ஹசன் ரூஹானியின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் ஜுன் 18 ஆம் திகதி நடைபெற்றது.

உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு சனிக்கிழமை அதிகாலை 2 மணி வரை நடைபெற்றது.

வாக்குப்பதிவு முடிவடைந்ததும் உடனடியாக வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கின. இதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை முடிவு அறிவிப்பின் போது,  இப்ராஹிம் ரய்ஸி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தேர்தலில் போட்டியிட்ட அப்தூல் நாசர் ஹெம்மாட்டி மற்றும் முகசன் ரஜாய் ஆகியோர் தங்களது தோல்வியை ஒப்புக் கொண்டதோடு, இப்ராஹிம் ரய்ஸிக்கு தங்களின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

தீவிர பழமைவாத கருத்துக்களைக் கொண்ட ரய்ஸி, ஈரான் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றினார்.

ஈரானின் ஆன்மீகத் தலைவருக்கு அடுத்ததாக, பெரும் அதிகாரம் படைத்தவராக ஜனாதிபதி கருதப்படுகிறார்.

தீவிரப் போக்குடையவர் எனக் கருதப்படும் இப்ராஹிம் ரய்ஸி, அமெரிக்காவின் பொருளாதார தடைப் பட்டியலிலும் இருக்கிறார்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற அரசியல் கைதிகள் மீதான மரண தண்டனைகளுடனும் இப்ராஹிம் ரய்ஸி தொடர்புடையவர் என்று சர்வதேச ஊடகங்கள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.