November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பெஞ்சமின் நெதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது; இஸ்ரேலின் பிரதமராக பதவியேற்றார் நப்தாலி பென்னட்

photo:Benjamin Netanyahu_twitter

இஸ்ரேலின் புதிய பிரதமராக நப்தாலி பென்னட் பதவியேற்றுள்ளார்.இதற்கமைய பெஞ்சமின் நெதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

2009, மார்ச் 31ஆம் திகதி முதல் பெஞ்சமின் நெதன்யாகு பிரதமராக இருந்து வந்த நிலையில், 2 ஆண்டுகளில் 4 முறை பாராளுமன்ற தேர்தல் நடந்தும் எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைத்திருக்கவில்லை.

இந்நிலையில்,கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி நடந்த தேர்தலில், மொத்தம் உள்ள 120 இடங்களில் பெஞ்சமின் நெதன்யாகுவின் கட்சி 30 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக வந்தபோதும் அவரால் கூட்டணி அரசு அமைக்க முடியவில்லை. இதனால் இழுபறி நிலைமை நீடித்தது.

இந்நிலையில், 8 எதிர்க்கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க உடன்பாடு எட்டப்பட்டது. இந்தக் கூட்டணியில் யேஷ் அதிட் (17 இடங்கள்), காஹோல் லாவன்- புளூ அண்ட் ஒயிட் (8 இடங்கள்), இஸ்ரேல் பெய்டெய்னு (7 இடங்கள்), தொழிலாளர் கட்சி (7 இடங்கள்), யமினா கட்சி (7 இடங்கள்), நியூ ஹோப் (6 இடங்கள்), மெரேட்ஜ் (6 இடங்கள்), அரபு இஸ்லாமிக் ராம் (4 இடங்கள்) ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகள் பெரும்பான்மையை விட கூடுதலாக ஒரு இடம் (மொத்தம் 62 இடங்கள்) பெற்றன.

இந்த கூட்டணியை யேஷ் அதிட் கட்சியின் தலைவர் யெயிர் லாப்பிட் அறிவித்தார். சுழற்சி முறையில் பிரதமர் பதவி வரும். முதலில் யமினா கட்சியின் தலைவரான நப்தாலி-பென்னட் பிரதமராக பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில், இஸ்ரேல் பாராளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் யமினா கட்சி தலைவர் நப்தாலி பென்னட் வெற்றி பெற்றார். இதையடுத்து, இஸ்ரேலின் புதிய பிரதமராக நப்தாலி-பென்னட் பதவி ஏற்றுக் கொண்டார். அவரது அமைச்சரவையில் 27 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.