July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜோர்ஜ் ஃபிலாய்ட் கொலையை பதிவு செய்த பெண்ணுக்கு ‘புலிட்சர்’ விருது அறிவிப்பு

photo:19thnews.org

அமெரிக்காவில் 2020 ஆம் ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த ஜோர்ஜ் ஃபிலாய்ட் என்ற கறுப்பினத்தவரை பொலிஸ் அதிகாரி ஒருவர் கொலை செய்த கொடூரமான காட்சியை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டிருந்த 18 வயதான டார்னெல்லா ஃப்ரேஷியர் என்ற இளம்பெண்ணுக்கு உலகின் உயரிய விருதான புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில் உள்ள மினியாபொலிஸ் நகரில், கடந்த 2020-ம் ஆண்டு மே 25 ஆம் திகதி டெரிக் சாவின் என்ற பொலிஸ் அதிகாரி தன்னுடைய காலால் கருப்பினத்தவரான ஜோர்ஜ் ஃபிலாய்டின் கழுத்தில் அழுத்தி கொலை செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி அமெரிக்காவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதனை வீடியோவாக பதிவு செய்தவர் டார்னெல்லா ஃப்ரேஷியர் என்ற இளம்பெண். அப்போது அவருக்கு வயது 17. ஜோர்ஜ் ஃபிலாய்டின் கொலை வெளி உலகிற்கு தெரிய அந்த வீடியோ மிக முக்கியமான காரணம் ஆகும். உலகம் முழுவதும் பரவிய வீடியோவால், இந்த சம்பவத்திற்கு பல்வேறு நாட்டு மக்கள் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர். மேலும் கருப்பினத்தவர்கள் மீது நடத்தப்படும் வன்முறைக்கு எதிராக  பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்தது.

இதனைத் தொடர்ந்து குறித்த பொலிஸ் அதிகாரி டெரிக் சாவின், பணி நீக்கம் செய்யப்பட்ட அதேவேளை,அவர் மீது விசாரணை நடத்தப்பட்டு அவரை குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது.

இந்நிலையில் ஜோர்ஜ் பிளாய்ட் கொலையை அம்பலப்படுத்திய குறித்த வீடியோவை பதிவு செய்த இளம்பெண் டார்னெல்லா ஃபிரேசியருக்கு உலகின் உயரிய விருதான புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

புலிட்சர் விருது 1917 ஆம் ஆண்டு முதல் ஊடகம், இலக்கியம், இசை ஆகிய துறைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் டார்னெல்லா ஃப்ரேஷியர் ஊடக பிரிவில் சிறப்பு புலிட்சர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜோர்ஜ் ஃபிலாய்டின் கொலையை தைரியமாக பதிவு செய்ததற்காக இந்த விருது வழங்கப்படுவதாக புலிட்சர் அமைப்பு தனது இணையத்தளத்தில் தெரிவித்துள்ளது. ஃப்ரேஷியரின் வீடியோவானது, உலகம் முழுவதும் பொலிஸாரின் கொடூரமான தாக்குதலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை தூண்டியதாகவும், உண்மை மற்றும் நீதியை வெளி உலகிற்கு தெரிவிப்பதில் குடிமக்களின் முக்கிய பங்கை எடுத்துக்காட்டுவதாகவும் புலிட்சர் அமைப்பு தெரிவித்துள்ளது.