July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மன்னருக்கு எதிராக மக்கள் போராட்டம் – தாய்லாந்தில் அவசரநிலை பிரகடனம்

தாய்லாந்தில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் மன்னர் மஹா வஜிரலோங்கோருக்கு எதிராக போராட்டம் அதிகரித்து வரும் நிலையில், தலைநகரமான பாங்காக்கில் அவரசநிலை பிரகடனம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

தாய்லாந்தில் பொதுமக்கள் பெருமளவில் ஒன்றுகூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் ஆர்ப்பாட்டங்களில் முன்னின்று நடத்திய முக்கிய தலைவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மக்கள் ஐந்து பேருக்கும் மேல் ஒன்றுகூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், தேசிய பாதுகாப்புக்கு ஊறு ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிட அனைத்து ஊடகங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மன்னர் மஹா வஜிரலோங்கார்ன் பெரும்பாலான நேரத்தை ஜெர்மனியில் செலவிடுவதுண்டு. நேற்று தனது தந்தையின் நினைவு நாளை அனுசரிப்பதற்காக ஜெர்மனியிலிருந்து தாய்லாந்து திரும்பியிருந்தார்.

அப்போது மக்கள் அவரை வணங்கி வரவேற்றிருந்தனர். ஆனால் மன்னரின் நடத்தையில் தவறு உள்ளது என்று மக்களிடையே கடும் எதிர்ப்பு காணப்படுகிறது.பெரும்பாலான மக்கள் கூடி அவருக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

மன்னரின் ஆட்சியில் மறுசீரமைப்புகள் கொண்டு வரவேண்டும், பிரதமர் பதவி விலகவேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் போராட்டங்களை நடத்திவருகிறார்கள். தாய்லாந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்போது புதிய பேரணியைத் திட்டமிட்டும் உள்ளனர்.

நேற்று மன்னர் நாடு திரும்பிய நிலையில், அவர் பவனி வரும் காரை மக்கள் மறிக்க முயன்ற போது, மன்னரினால் அவசர நிலைமை பிரகடனம் செய்யப்பட்டது.

2014இல் சதிப்புரட்சி மூலம் பதவியை கைப்பற்றிய முன்னாள் இராணுவதளபதியான பிரயுத் சான் ஓச்சா கடந்த வருடம் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய தேர்தலின் பின்னர் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

இவர் பதவி விலகவேண்டும் என கோரி மாணவர்கள் ஆரம்பித்த போராட்டம் தாய்லாந்தின் மன்னரின் அதிகாரங்களை குறைக்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் விரிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.