July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

8 ஆயிரம் பேரை கொன்ற ஸ்ரேபிரெனிகா இனப்படுகொலை; ராட்கோ மிலாடிக்கின் மேல்முறையீடு ஐ.நா நீதிபதிகளால் நிராகரிப்பு!

photo:UNIRMCT_twitter

உலக வரலாற்றின் ஒரு கருப்பு அடையாளமாக விளங்கும் ஸ்ரேபிரெனிகா இனப்படுகொலை தொடர்பாக தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் போஸ்னிய செர்பிய இராணுவத் தளபதி ராட்கோ மிலாடிக்கின் மேல்முறையீட்டு மனுவை ஐ.நா நீதிபதிகள் இன்று (08) நிராகரித்தனர்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐ.நா. பாதுகாப்பின் கீழ் இருந்த ஐரோப்பிய மண்ணில் இடம்பெற்ற மிக மோசமான சம்பவமாக சுமார் 8,000 முஸ்லிம் ஆண்கள் மற்றும் சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டமை பார்க்கப்படுகின்றது.

“போஸ்னியாவின் கசாப்புக்காரன்” என்று அழைக்கப்படும் மிலாடிக், முஸ்லிம்களையும் போஸ்னியர்களையும் வெளியேற்றுவதற்காக இவ் “இன அழிப்பை” திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்டார்.

ஸ்ரேபிரெனிகா இனப்படுகொலை வழக்கில் ஐ.நா.வின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் விசாரணையை எதிர்கொண்ட கடைசி சந்தேக நபர்களில் ஒருவராக மிலாடிக் உள்ளார்.  இவர் 16 ஆண்டுகளின் பின்னர் 2011 இல் கைது செய்யப்பட்டார்.

இந்த குற்றச்செயலை மேற்பார்வையிட்டதற்காகவும், 1992-95 போஸ்னியப் போரின்போது பொதுவாக போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காகவும் 2017 ஆம் ஆண்டில் மிலாடிக்கு ஆயுள் தண்டனையை ஐ.நா நீதிமன்றம் உறுதி செய்தது.

இந்த தண்டனைக்கு எதிராக மிலாடிக்கின் மேல்முறையீடு செய்திருந்தார்.

இது குறித்த தீர்ப்பு இன்று (8) ஐந்து நீதிபதிகளை கொண்ட மேல்முறையீட்டு நீதிபதிகள் குழுவினால் வழங்கப்பட்டது.

இதன்போது, மிலாடிக் தனக்கு எதிரான முந்தைய குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதற்கான சரியான ஆதாரங்களை முன்வைக்க தவறியதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

பரந்த இனப்படுகொலை குற்றச்சாட்டுகளில் மிலாடிக் விடுவிக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரி அரசு தரப்பு மேல்முறையீடு செய்திருந்தது.

எவ்வாறாயினும், குறித்த போரின் போது வேறு சில பகுதிகளில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பாக மிலாடிக்கிற்கு எதிராக இரண்டாவது தண்டனையை கோரும் அரசு தரப்பின் மேல்முறையீட்டை நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர்.