மேற்கு ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான புர்க்கினா பசோவின் வட பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் 132 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
புர்க்கினா பசோவில் மத அடிப்படையிலான இயக்கங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
இன குழுக்கள் இடையேயும் அவ்வப்போது அங்கு மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இங்கு நிலவி வருகின்ற வன்முறைக்கு முடிவு கட்ட பாதுகாப்பு படையினர் போராடி வருகின்றனர்.
இருப்பினும், வன்முறைக்கு பயந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேறி இடம் பெயர்ந்து விட்டனர்.
இந்த நிலையில், நைஜரின் எல்லையில் உள்ள யாகா மாகாணத்தில் உள்ள சொல்ஹான் கிராமத்தில் வசிப்பவர்கள் மீதே வெள்ளிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தியவர்கள் வீடுகளையும், சந்தைத் தொகுதியொன்றையும் எரித்ததாக அந்நாட்டு அரசாங்கம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் இதுவென அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதனிடையே, அந்ந நாட்டு அரசாங்கம் தாக்குதல் நடத்தியவர்களை பயங்கரவாதிகள் என்று தெரிவித்துள்ள போதிலும் தாக்குதலுக்கு எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.
இதனையடுத்து அந்நாட்டு அரசாங்கம் 72 மணிநேர தேசிய துக்க தினத்தை அறிவித்துள்ளது.
இவ்வாறான செயற்பாடுகளை எதிர்ப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அந்நாட்டு ஜனாதிபதி ரோச் கபோர் அறிவித்துள்ளார்.
இந்த தாக்குதலை வன்மையாக கண்டித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்தோனியோ குட்டெரஸ், தீவிரவாதத்திற்கு எதிரான சர்வதேச நாடுகளின் ஆதரவு இரட்டிப்பாக வேண்டும் என கூறியுள்ளார்.