October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வீரத்திற்கான தங்கப் பதக்கம் வழங்கப்பட்ட எலி கண்ணிவெடி அகற்றும் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறது

வீரத்திற்கான தங்கப் பதக்கம் வழங்கப்பட்ட மாகவா என்ற பெயருடைய எலி, கண்ணிவெடிகளைக் கண்டுபிடிக்கும் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறது.

கடந்த ஐந்தாண்டு காலப்பகுதியில், கம்போடியாவில் 71 கண்ணிவெடிகள் மற்றும் இன்னும் பல வெடிக்காத பொருட்களை கண்டறிய இந்த எலி உதவியுள்ளது.

கண்ணிவெடிகளைக் கண்டறிய உதவியதன் மூலம் பல உயிர்களை காப்பாற்றியதற்காக 2020 ஆம் ஆண்டில் பிரிட்டனைச் சேர்ந்த பி.டி.எஸ்.ஏ. என்ற விலங்குகள் நல தொண்டு நிறுவனத்தினால் மாகவா தங்கப் பதக்கம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

இந்த பதக்கத்தை பெற்றுக்கொண்ட ஆப்பிரிக்க பாச்சட் வகையைச் சேர்ந்த எலிக்கு இப்போது 7 வயதாகிறது.

பல தசாப்த கால மோதல்களால் பாதிக்கப்பட்ட தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில் மில்லியன் கணக்கான கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன.

அங்கு கைவிடப்பட்ட வெடிக்காத வெடிபொருட்களால் ஒவ்வொரு வருடமும் பெருமளவானவர்கள் உயிரிழக்கின்றனர்.

இவ்வாறான உயிரிழப்புகளை கட்டுப்படுத்தும் வகையில் கண்ணிவெடிகளை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளுக்கு மோப்ப நாய்களை போன்று எலிகளும் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக பெல்ஜியத்தில் பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமான அப்போபோவால் மாகவா எலிக்கும் பயிற்சியளிக்கப்பட்டுள்ளது.

இந்த எலி வயதை அடிப்படையாக கொண்டு பணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அதனை பராமரிக்கும் மாலென் கூறியுள்ளார். “மாகவாவின் செயல்திறன் இன்னும் குறையவில்லை. அது தொடர்ந்தும் வீரனை போலவே உள்ளது. பணியில் இல்லாவிட்டாலும் தொடர்ந்தும் எங்களுடன் இருக்கும் என்று” மாலென் குறிப்பிட்டுள்ளார்.