July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை, இந்தியா உள்ளிட்ட 17 ஆசிய நாடுகளுக்கு தடுப்பூசிகளை பகிர்ந்தளிக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு

இலங்கை இந்தியா உள்ளிட்ட 17 ஆசிய நாடுகளுக்கு 7 மில்லியன் கொவிட் தடுப்பூசிகளை பகிர்ந்தளிக்க உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

ஜூன் மாத இறுதிக்குள், தமது தடுப்பூசி விநியோகத்தின் 80 மில்லியன் டோஸ்களை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள உள்ளதாக அமெரிக்கா அறிவித்ததுக்கு அமைவாக, அதன் முதல் கட்டமாக 25 மில்லியன் தடுப்பூசிகளை பகிர்ந்து கொண்டுள்ளது.

இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக நாடுகளில் கொரோனா பரவலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான தமது ஒத்துழைப்பை அமெரிக்கா தொடர்ந்து வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோயினால் அதிக நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும் இவ்வாறு தடுப்பூசிகளை வழங்குவதாக அமெரிக்கா கூறியுள்ளது.

அமெரிக்காவின் இந்த தடுப்பூசி திட்டத்தில் குறைந்தது 75 சதவிகிதம், கிட்டத்தட்ட 19 மில்லியன் உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவாக்ஸ் திட்டத்தின் மூலம் பகிரப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவாக்ஸ் திட்டத்திற்காக 4 பில்லியன் டொலர்களை வழங்கி அமெரிக்கா தனது பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஏற்கனவே 4 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகளை கனடா மற்றும் மெக்ஸிகோவுடன் பகிர்ந்து கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

“தொற்று நோய் அச்சுறுத்தலுக்கு எதிராக பாதுகாப்பான ஒரு உலகத்தை உருவாக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் ” எனஅமெரிக்கா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.