November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாரசீக வளைகுடா கடற்பரப்பில் தீ பற்றி எரிந்த ஈரானிய கடற்படையின் பாரிய கப்பல் கடலில் மூழ்கியது!

பாரசீக வளைகுடா கடலில் தீப்பற்றி எரிந்த ஈரானிய கடற்படையின் பாரிய கப்பல் கடலில் மூழ்கியுள்ளதாக அந்நாட்டு அரச செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் துறைமுகமான ஜாஸ்க் அருகே புதன்கிழமை அதிகாலையில் ஈரானி கடற்படைக்கு சொந்தமான ஐ.ஆர்.ஐ.எஸ் கார்க் என்ற கப்பல் தீ பற்றி எரிய தொடங்கியுள்ளது.

கப்பலின் என்ஜின் அறையில் தீ பரவல் தொடங்கியதாகவும் இதனால் கப்பலின் பாகங்கள் உருகி கடலில் விழுந்ததாகவும் சர்வதேச செய்திகள் கூறுகின்றன.

தீயை அணைப்பதற்கு தீயணைப்பு வீரர்கள் 20 மணி நேரத்திற்கும் மேலாக போராடியதாக ஈரானிய கடற்படை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதன் போது கப்பலிலிருந்த 400 பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

குறித்த கப்பல், சில நாட்களாக சர்வதேச கடற்பரப்பில் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தீ விபத்துக்கான காரணம் உடனடியாக அறியப்படாத நிலையில், சம்பவம் குறித்து கடற்படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

இங்கிலாந்தில் கட்டப்பட்ட இந்த கப்பல் ஈரானின் மிகப்பெரிய கடற்படைக் கப்பலாகும் என கடற்படை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

1977 ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக ஈரானிய கடற்படையின் பயிற்சி நடவடிக்கைகளுக்கு இந்த கப்பல் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதாக உத்தியோகபூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன.