file photo: Facebook/ Kevin Rudd
சீனாவின் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் அத்துமீறல்கள் அதிகரித்து வருவதாகவும், உலக நாடுகள் அதற்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என்றும் அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமர் கெவின் ருட் அழைப்பு விடுத்துள்ளார்.
ஆசிய பொருளாதாரம் தொடர்பாக சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாடுகள் தனிமைப்படுத்தப்பட்டு, சீனாவின் அத்துமீறல்களுக்கு உள்ளாகும் ஆபத்து நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமை போன்ற விடயங்களில் சீனாவை சவாலுக்கு உட்படுத்த மேற்கு நாடுகள் பயப்படத் தேவையில்லை என்றும் அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவின் ஆதிக்கம் காரணமாக வடிவமைக்கப்பட்ட புதிய புவிசார் அரசியல் ஒழுங்கின் பக்கம் உலக நாடுகள் செல்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலக நாடுகள் சீனாவுடன் கருத்து முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்வதாயின், அதனை தனித்து இல்லாமல், ஏனைய நாடுகளுடன் இணைந்து மேற்கொள்வதே சிறந்தது என்றும் கெவின் ருட் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவுக்கு எதிராக தனித்து செயற்படும் போது, சீனா நாடுகளுக்கு எதிராக இருதரப்பு செல்வாக்கில் தாக்கம் செலுத்துவதை எளிதாக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
சீனாவுக்கு அவுஸ்திரேலியாவுக்கு இடையேயான உறவுகளில் விரிசல் ஏற்பட்டு வரும் நிலையில், நேர்காணல் ஒன்றில் அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் இவற்றைக் குறிப்பிட்டுள்ளார்.