உலகையே பெரும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ள கொரோனா வைரஸ் சீனாவில் தான் தோற்றம் பெற்றது என அமெரிக்கா கூறி வருகின்றது. இதனை நிரூபிப்பதற்காக பல்வேறு முயற்சிகளிலும் இறங்கியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக அமெரிக்க புலனாய்வு அமைப்புகள், கொரோனா வைரஸின் தோற்றம் குறித்தும் அது மனிதர்களுக்கு எவ்வாறு பரவியது என்பது குறித்து 90 நாட்களுக்குள் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் புதன்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் தங்களின் முயற்சிகளை இரட்டிப்பாக்கி, “ஒரு உறுதியான முடிவை முன்வைப்பதற்கு ஏதுவான மற்றும் நம்பகமான தகவல்களை திரட்டுவதுடன், அதனை பகுப்பாய்வு செய்யும்படியும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையிலேயே அமெரிக்கா முன்னெடுத்துள்ள இந்த முயற்சிகளை சீனா கண்டித்துள்ளது.
இது குறித்து சீனாவின் வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் அமெரிக்காவின் “அரசியல் கையாளுதல்” குறித்து குற்றம் சாட்டியுள்ளது.
இது கொவிட் -19 க்கும் சீன நகரமான வுஹானில் உள்ள வைரஸ் ஆராய்ச்சி ஆய்வகத்திற்கும் இடையிலான எந்தவொரு தொடர்பும் இல்லை என சீனா நிராகரித்துள்ளது.
எனினும் வுஹானில் உள்ள ஒரு கடல் உணவு சந்தையில் முதலாவது தொற்றாளர் அடையாளம் காணப்பட்டதையடுத்து விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இதேவேளை, சீனாவின் ஆய்வகத்திலிருந்து வைரஸ் கசிந்திருக்கலாம் என்ற கருத்து உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் சீனா இணைந்து நடத்திய ஆய்வில் சர்ச்சைக்குரிய வகையில் இது நிராகரிக்கப்பட்டது.
இன்றுவரை உலகம் பூராகவும் 168 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன், சுமார் 3.5 மில்லியன் இறப்புகள் பதிவாகியுள்ளன.