கொரோனா வைரஸின் தோற்றத்தை ஆராய்ந்து 90 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து உலக நாடுகளில் சர்ச்சி நிலவி வரும் நிலையில், பைடன் அமெரிக்க புலனாய்வுத் துறையினருக்கு இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா தொடர்பான புலனாய்வு முயற்சிகளை இரட்டிப்பாக்கும்படி பைடன் புலனாய்வுத் துறையினரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு கொவிட்-19 வைரஸ் சீனாவின் வூஹான் நகரில் அடையாளம் காணப்பட்டது.
கொரோனா காரணமாக உலகில் இதுவரையில் 3.5 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளதுடன் 168 மில்லியன் பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த வைரஸ் சீனாவின் கடலுணவு சந்தை ஒன்றில் இருந்து பரவியதாகவும், விலங்குகளில் இருந்து மனிதனுக்கு பரவியதாகவும் விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் சீனாவின் ஆய்வுகூடம் ஒன்றில் இருந்து வெளிவந்திருக்கக்கூடும் என்பதற்கான ஆதாரங்கள் வளர்ந்து வருவதாக அண்மையில் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்தே, அமெரிக்க ஜனாதிபதி 90 நாட்களில் அறிக்கை கோரியுள்ளார்.