November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பெலரஸ் மீது பயணிகள் விமான கடத்தல் குற்றச்சாட்டு; தடைகள் விதிப்பது குறித்து ஐரோப்பிய நாடுகள் பரிசீலனை

கிரீஸ் நாட்டில் இருந்து லித்துவேனியா நோக்கி சென்றுகொண்டிருந்த பயணிகள் விமானத்தை பெலரஸ் திசை திருப்பியதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ரெயன் எயார் பயணிகள் விமானம் பெலரஸ் ஜனாதிபதியின் உத்தரவின் பேரில், அரச போர் விமானத்தைப் பயன்படுத்தி தரையிறக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

பயணிகள் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக போலியான தகவல் வழங்கியே, தரையிறக்கப்பட்டுள்ளதாக மேற்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பெலரஸ் ஜனாதிபதியின் செயலுக்கு ஐரோப்பிய நாடுகள் கண்டனம் வெளியிட்டுள்ளன.

பெலரஸில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஊடகவியலாளர் ரோமன் ப்ரொடசேவிக் குறித்த விமானத்தில் இருந்ததாகவும், விமானம் தரையிறக்கப்பட்ட பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாகவும் பெலரஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பெலரஸ் ஜனாதிபதி அலெக்ஸாண்டர் லுகாஷென்கோவுக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றைத் தூண்டிவிட்டதாக ஊடகவியலாளர் குற்றம்சாட்டப்பட்டிருந்தார்.

பெலரஸ் ஜனாதிபதியின் பயணிகள் விமான கடத்தல் செயற்பாட்டுக்கு எதிராக தடைகள் விதிப்பது குறித்து இன்று பிரசல்ஸில் கூடவுள்ள ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

சிவில் சமூக செயற்பாட்டாளர் மற்றும் ஊடகவியலாளர் ரோமன் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் ஐரோப்பிய நாடுகள் கேட்டுக்கொண்டுள்ளன.