January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நிபந்தனைகளுடன் எல்லைகளை திறக்க திட்டமிடும் ஐரோப்பிய ஒன்றியம்;எச்சரிக்கிறது உலக சுகாதார ஸ்தாபனம்!

ஐரோப்பிய ஒன்றியத்தினால் அனுமதிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டவர்கள் தமது எல்லைகளை திறக்க உள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

எனினும், ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த முடிவுக்கு ஐரோப்பிய தலைவர்கள் “கடந்த ஆண்டு செய்த அதே தவறுகளை இந்த முறையும் செய்யக்கூடாது” என  உலக சுகாதார ஸ்தாபனம்  எச்சரிக்கை விடுத்துள்ளது.

பல மாதங்களாக கொரோனா தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்ட பயண கட்டுப்பாடுகளை இதன் ஊடாக ஐரோப்பிய ஒன்றியம் நீக்க உள்ளது.

இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவரும் நிலையில், அடுத்தவாரம் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கமைய, அமெரிக்காவில் கிடைக்கும் அனைத்து கொரோனா வைரஸ் தடுப்பூசிகளும் ஐரோப்பிய ஒன்றியத்தினால் அனுமதிக்கப்பட்டவை ஆகும். எனவே அமெரிக்கர்கள் இந்த தளர்வுகள் மூலம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பயணிக்க முடியும்.

எனினும் ரஷ்யாவிலும் சீனாவிலும் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் ஐரோப்பிய ஒன்றியத்தினால் அனுமதிக்கப்படாதவை என்பதால் இதனை செலுத்திக் கொண்டவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பயணிக்கும் வாய்ப்பு கிடைக்காது.

இதனிடையே ஐரோப்பாவில் பயன்பாட்டில் உள்ள கொவிட் தடுப்பூசிகள் புதிய கொரோனா வைரஸ் வகைகளிலிருந்து பாதுகாப்பளிப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

எனினும் நாடுகளுக்கு இடையேயான பயண தடைகளை நீக்குவதன் மூலம் நாடு கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் அடைந்துள்ள முன்னேற்றம் பாதிக்க கூடும் எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தீவிரமாக பரவும் கொரோனா புதிய வகை வைரஸ்கள் தொடர்ந்தும் பரவுவதை  தடுக்க சர்வதேச பயணங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது.

ஐரோப்பிய தலைவர்கள் ;கடந்த ஆண்டு செய்த அதே தவறுகளை இந்த முறையும் செய்யக்கூடாது’ என உலக சுகாதார அமைப்பின் பிராந்திய இயக்குனர் ஹான்ஸ் க்ளூக் கேட்டு கொண்டுள்ளார்.

“தொற்று நோய் இன்னும் முடியவில்லை” என தெரிவித்துள்ள அவர், நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்வதில்  எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். சர்வதேச பயணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் அல்லது தவிர்க்க வேண்டும்” என கேட்டு கொண்டுள்ளார்.