September 10, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீனாவின் “ஸுஹுரோங்” விண்கலம் செவ்வாயில் எடுத்த 1வது படத்தை பூமிக்கு அனுப்பியது!

சீனா தனது ஸுஹுரோங் விண்கலத்தை மே 15 ஆம் திகதி செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறக்கியது.

தற்போது  ஸுஹுரோங் விண்கலம் செவ்வாய் கிரகத்திலிருந்து எடுக்கப்பட்ட முதலாவது புகைப்படம் மற்றும் காணொளிகளை பூமிக்கு அனுப்பியுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

சீனா அனுப்பிய ஆறு சக்கரங்களை கொண்ட ஸுஹுரோங் ரோபோ, செவ்வாயில் வடக்கு அரைக்கோளத்தின் உட்டோபியா பிளானிட்டியா நிலப்பரப்பில் தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டது.

செவ்வாய் கிரகத்திலிருந்து ஸுஹுரோங் விண்கலம் அனுப்பிய முதல் புகைப்படம், கருப்பு வெள்ளை படம் ஆகும்.

இந்தப்படம் ஸுஹுரோங் விண்கலத்தின் முன் நிறுவப்பட்டுள்ள ஒரு தடையாக தவிர்க்கும் கமரா மூலம் எடுக்கப்பட்டுள்ளதாக சீன விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரோவரின் முன்னோக்கி திசையின் நிலப்பரப்பு இந்தப்படத்தில் தெளிவாக தெரியும்.மேலும் கமராவின் அகல-கோண லென்ஸ் காரணமாக செவ்வாய் கிரகத்தின் அடிவானம் வளைந்திருப்பது தெரிவதாக இந்த படம் குறித்து சீன விண்வெளி ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.

இரண்டாவது ஒரு வண்ண புகைப்படத்தை ரோவர் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோவரின் பின்புறத்தில் பொருத்தப்பட்ட வழி செலுத்தல் கேமரா மூலம் இந்தப்படம் எடுக்கப்பட்டது.

இதில் ரோவரின் சோலார் பேனல்கள் மற்றும் ஆண்டெனா விரிவடைவதை கட்டுவதாகவும், மேலும் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ள சிவப்பு மண் மற்றும் பாறைகள் படத்தில் தெளிவாக காண முடிவதாகவும் சீன விண்வெளி ஆய்வு மையம் விளக்குகிறது.

செவ்வாயில் எடுக்கப்பட்ட காணொளி ஒன்றையும் சீன விண்வெளி ஆய்வு மையம் பகிர்ந்து கொண்டுள்ளது. இந்த காணொளி தரையிறங்கும் போது லேண்டர் மற்றும் ரோவர் எவ்வாறு சுற்றுப்பாதையில் இருந்து பிரிக்கப்பட்டது என்பதை காட்டுகின்றது.

சீனா பூமியைத் தவிர வேறு ஒரு கிரகத்தில் ரோவர் ஒன்றை தரையிறக்கியுள்ள முதலாவது  ஆய்வு இதுவாகும்.

அத்தோடு அமெரிக்காவை தொடர்ந்து செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கிய இரண்டாவது நாடாக சீனா வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.