நீண்ட வேலை நேரம் காரணமாக ஒரே ஆண்டில் 745,000 பேர் உயிரிழந்துள்ளமை ஆய்வுகளில் தெரிய வந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தகவல் வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக இந்த நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்றும் உலக சுகாதார அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.
சர்வதேச தொழிலாளர் அமைப்புடன் (ஐ.எல்.ஓ) உலக சுகாதார ஸ்தாபனம் இணைந்து 2016 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட உலகளாவிய ஆய்வில் இந்த அதிர்ச்சியான விடயம் தெரிய வந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
தென்கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் வாழும் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
168 மணித்தியாலங்கள் கொண்ட ஒரு வார காலப்பகுதியில் 95 மணி நேரம் , 80 மணி நேரம், 72 மணிநேரம் என வேலை செய்து வருவதாகவும் ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.
35 முதல் 40 மணிநேர வேலை செய்பவர்களுடன் ஒப்பிடுகையில் வாரத்தில் 55 மணிநேரம் அல்லது அதற்கு மேல் வேலை செய்பவர்களுக்கு பக்கவாதம் மற்றும் இதய நோய்களினால் உயிர் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு 35% வீதத்துக்கும் அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.
அதுவே 35 முதல் 40 மணிநேர வேலை செய்பவர்களுக்கு உயிர் ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு 17% வீதத்துக்கும் அதிகம் என ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
நீண்ட நேரம் உழைப்பதன் விளைவாக இறந்தவர்களில் கிட்டத்தட்ட முக்கால்வாசி பேர் நடுத்தர வயது மற்றும் வயதான ஆண்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
பெரும்பாலான இறப்புகள் வாழ்க்கையின் பிற்பகுதியில் நிகழ்ந்துள்ளன.
நிறுவனங்கள் பணியாளர்களின் தனிப்பட்ட நல்வாழ்வை பற்றி கவலைப்படாமல் தங்களின் எல்லைக்குள் பணியாற்ற கட்டாயப்படுத்துவதாக இந்த ஆய்வுகளின் போது பலர் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.