July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இஸ்ரேல்-காஸா மோதல்: ஹமாஸ் தலைவரை குறிவைக்கிறது இஸ்ரேலிய இராணுவம்

பாலஸ்தீனிய போராளி குழுவான ஹமாஸின் அரசியல் தலைவர் யஹ்யா சின்வாரை குறிவைத்து காஸா பகுதியில் உள்ள அவரின் வீட்டின் மீது வான்வழி தாக்குதலை மேற்கொண்டதா இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

குறித்த தாக்குதல் தொடர்பாக காணொளியை இராணுவம் வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலிய வான்வழி தாக்குதல்கள் மூலம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காஸாவில் 26 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வேளை இஸ்ரேல் மீது ஹமாஸ் குழு ரொக்கெட்டுகளை ஏவி சரமாரியான தாக்குதலை முன்னெடுத்துள்ளது.

அதிகரித்து வரும் இஸ்ரேல் பாலஸ்தீனிய மோதல்களை முடிவுக்கு கொண்டுவர உலக நாடுகள் முயன்று வருகின்றன.

எனினும் ரொக்கெட் தாக்குதல்களுக்கு “தொடர்ந்து பலமாக பதிலளிப்பேன்” என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதியளித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை முதல் அதிகரித்த மோதல் காரணமாக காஸாவில் 52 குழந்தைகள், 31 பெண்கள் உட்பட குறைந்தது 181 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 1,225 பேர் காயமடைந்துள்ளதாக ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இறந்தவர்களில் அதிகமானோர் போராளிகள் என இஸ்ரேல் கூறுகிறது. அத்தோடு தமது தரப்பில் 2 குழந்தைகள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்கள் உரிமை கோரும் கிழக்கு ஜெருசலேமில் பல வாரங்களாக பதற்றம் அதிகரித்த நிலையில் கடந்த ஆறு நாட்களாக வன்முறை வெடித்துள்ளது.

இதனிடையே, ஐ.நா.பாதுகாப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் ஆகியோருக்கு சனிக்கிழமை தொலைபேசி மூலம் அழைத்து நிலைமை குறித்து கவலை தெரிவித்துள்ளார்.