July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இஸ்ரேல்-பாலஸ்தீன் மோதல்; முக்கிய கட்டிடத் தொகுதி மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 10 பேர் பலி!

காஸாவில், அல் ஜசீரா மற்றும் அசோசியேட்டட் பிரஸ் ஆகிய செய்தி நிறுவனங்களின் அலுவலகங்கள் அமைந்துள்ள உயர்ந்த கட்டிடத்தொகுதியை ஏவுகணை வீசி தாக்கியதாக இஸ்ரேலின் இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் குறைந்தது எட்டு குழந்தைகள், இரண்டு பெண்கள் உள்ளிட்ட 10 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கட்டிடத்தில் ஹமாஸுக்கு சொந்தமான “இராணுவ சொத்துக்கள்” இருப்பதாக இஸ்ரேல் தெரிவிக்கின்றது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையே ஆறாவது நாளாகவும் பதற்ற நிலை தொடர்கின்றது.

ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் இஸ்ரேலிய பொலிஸாருக்கும் பாலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையிலான மோதல்கள் இரவு வரை தொடர்ந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

திங்கட்கிழமை முதல் இடம்பெற்றுவரும் இந்த மோதலில் காஸா பகுதியில் 39 குழந்தைகள் உட்பட 140 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 950 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில், இஸ்ரேலிய படைகள் குறைந்தது 13 பாலஸ்தீனியர்களை கொன்றுள்ளதாகவும் இஸ்ரேலின் தரப்பில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

 

இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதலிலிருந்து தப்பிக்க ஆயிரக்கணக்கான பாலஸ்தீனிய குடும்பங்கள் வடக்கு காஸாவில் ஐக்கிய நாடுகள் சபையில் நடத்தப்படும் முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இவ்வாறு சுமார் 10,000 பாலஸ்தீனியர்கள் காஸாவில் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக ஐ.நா மதிப்பிட்டுள்ளது.

இதனிடையே அமெரிக்க பிரதிநிதி ஹாதி அம்ர், இஸ்ரேல்- பாலஸ்தீன மற்றும் ஐ.நா அதிகாரிகளுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.நா பாதுகாப்பு சபையின் கூட்டம் இடம்பெறவுள்ள நிலையிலேயே, அமெரிக்க பிரதிநிதியின் இஸ்ரேஸ் விஜயம் அமைந்துள்ளது.

இஸ்ரேல்- பாலஸ்தீன் ஆகிய நாடுகளுக்கு இடையே நிலையான அமைதியை ஏற்படுத்துவதே ஹாதி அம்ரின் விஜயத்தின் நோக்கமென இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.