இஸ்ரேல்- பலஸ்தீன் இடையே கடந்த சில நாட்களாக தொடரும் கடும் மோதல் உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இரு தரப்பும் ரொக்கட் தாக்குதல்களை நடத்தி வருகின்ற நிலையில், காஸா பகுதியிலிருந்து இஸ்ரேல் நோக்கி ஏவப்பட்ட ரொக்கெட்டுகளை இஸ்ரேலிய “இரும்பு டோம்” வான் பாதுகாப்பு அமைப்பு முறியடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பான காணொளிகளும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன.
“இரும்பு டோம்” என்பது அமெரிக்காவின் நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவுடன் இஸ்ரேலின் ரஃபேல் மேம்பட்ட பாதுகாப்பு அமைப்பும் விண்வெளி நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு ஆகும்.
இந்த அமைப்பு நடுத்தர மற்றும் நீண்ட தூர இலக்குகளை தாக்கும் விமானங்கள், ட்ரோன்கள், ரொக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகள் உள்ளிட்டவைகளை இது தடுத்து நிறுத்தும் செயலில் ஈடுபட்டுள்ளது.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே நீண்ட காலமாகவே மோதல்கள் நிலவி வருகின்ற போதிலும் 2014 ல் நடந்த போருக்கு பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய மோதல் இதுவாகும்.
இஸ்ரேலின் ஜெருசலேமில் உள்ள ஷைக் ஜாரா மாவட்டத்தில் யூதர்கள் தங்களுக்கு சொந்தமானது என்று கூறும் நிலத்தில் வசித்து வந்த பாலஸ்தீன குடும்பங்களை வெளியேற்ற இஸ்ரேல் அரசு நடவடிக்கை எடுத்ததையடுத்து அங்கு கலவரம் வெடித்தது.
கடந்த திங்கட்கிழமை இஸ்ரேலின் ஜெருசலேமில் உள்ள அல் அக்ஷா வழிபாட்டு தளத்தில் பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் செவ்வாய்க்கிழமை ரொக்கெட் தாக்குதல் நடத்தினர்.
இந்த வான் தாக்குதலை, இஸ்ரேலிய “இரும்பு டோம்” வான் பாதுகாப்பு அமைப்பு முறியடித்துள்ளது.
இருதரப்பும் மாறி மாறி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த மோதல் நீடிக்குமானால் காஸா முனையத்தில் நிலைமை கட்டுப்பாட்டை மீறி போகலாம்.
ஹமாஸ் போராளிகள் அமைப்பு ஆட்சி செய்துவரும் பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காஸா உள்ளது. ஹமாஸ் போராளிகள் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது.