இஸ்ரேல்- பலஸ்தீனுக்கு இடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேலின் லோட் நகரில் அவசர கால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய அரபு மக்கள் வன்முறைகளில் ஈடுபட ஆரம்பித்ததைத் தொடர்ந்து, இவ்வாறு அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பலஸ்தீன் மீதான வான்வழி தாக்குதல்களை நிறுத்தக் கோரி தாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக இஸ்ரேலில் உள்ள அரபு மக்கள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலிய வான்வழி தாக்குதல்களில் 35 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
பலஸ்தீன தீவிரவாதக் குழுக்கள் மீதே தாம் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய படையினர் தெரிவித்துள்ளனர்.
ஜெருஸலம் நகரில் இஸ்ரேலிய குடியேற்றங்களுக்கு எதிர்ப்பு வெளியிட்ட பலஸ்தீன மக்கள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
பலஸ்தீனின் காஸா மேற்குக் கரையில் உள்ள ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது 200 க்கும் அதிகமான ரொக்கட் தாக்குதல்களை நடத்தியதாக தெரிவித்துள்ளது.
ஹமாஸின் ரொக்கட் தாக்குதல்களை தாம் வெற்றிகரமாக முறியடித்ததாக இஸ்ரேலிய இராணுவ பிரதானி குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல்- பலஸ்தீன் அமைதியின்மை முடிவுக்கு வர வேண்டுமென்று பல நாடுகளும் கேட்டுக்கொண்டுள்ளன.