January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீத் மீதான குண்டு தாக்குதல்; பிரதான சந்தேக நபர் கைது

மாலைதீவு பாராளுமன்ற சபாநாயகரும், முன்னாள் ஜனாதிபதியுமான மொஹமட் நஷீத்தை இலக்கு வைத்து, மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதல் தொடர்பில் ‘பிரதான சந்தேக நபர்’ கைது செய்யப்பட்டுள்ளதாக மாலைதீவு  பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

மாலைதீவு பாராளுமன்ற சபாநாயகரும், முன்னாள் ஜனாதிபதியுமான 53 வயதான மொஹமட் நஷீத்தின், வீட்டுக்கு வெளியே கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் அவர் படு காயமடைந்தார்.

 

இதையடுத் மொஹமட் நஷீத் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு 16 மணி நேர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குண்டு தாக்குதல் இடம் பெற்று மூன்று நாட்கள் கடந்துள்ள நிலையில், பிரதான சந்தேக நபரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளதாக மாலைதீவு பொலிஸார் தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

குண்டு வெடிப்பு சம்பவம் பதிவான சி.சி.டி.வி காணொளி காட்சிகளின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

https://twitter.com/PoliceMv/status/1391364254666657799?s=08

 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அதுஹாம் அகமது ரஷீத் என்ற 25 வயது நபர் என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் “மத தீவிரவாதிகளால்” நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலுடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாகவும் மேலும் ஒருவரை புலனாய்வு பிரிவினர் தேடி வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 

குறித்த குண்டுவெடிப்பில் பிரிட்டன் பிரஜை உள்ளிட்ட மூவர் காயமடைந்தனர். சபாநாயகர் மொஹமட் நஷீத்தின் உடல் நிலை தேறி வருவதாக சனிக்கிழமை வைத்தியர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.