November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இரண்டாவது நாளாகவும் பலஸ்தீனியர்கள்- இஸ்ரேலிய பொலிஸார் மோதல்; 308 பேருக்கு காயம்

பலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலிய பொலிஸாருக்கும் இடையே வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஏற்பட்ட மோதல்கள் காரணமாக 308 பேர் காயமடைந்துள்ளனர்.

ஜெருஸலம் நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பலஸ்தீனியர்கள் பொலிஸார் மீது கற்களை எறிந்து, டமஸ்கஸ் நுழைவாயிலுக்கு தீ வைத்ததாகவும், அதற்குப் பதிலளிக்கும் வகையில் இஸ்ரேலிய பொலிஸார் தாக்குதல் நடத்தியதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சனிக்கிழமை இரவு இடம்பெற்ற மோதல் சம்பவங்களில் 90 பலஸ்தீனிய பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக பலஸ்தீன மருத்துவத்துறை அறிவித்துள்ளதோடு, ஒரு இஸ்ரேலிய அதிகாரி காயமடைந்துள்ளதாக இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலிய குடியேற்றவாசிகளால் உரிமை கோரப்பட்ட இடத்தில் இருந்து பலஸ்தீனியர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து, ஜெருஸலத்தில் அமைதியின்மை ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மோதல் சம்பவங்களில் 200 பலஸ்தீன பொதுமக்களும் 17 இஸ்ரேலிய பொலிஸ் அதிகாரிகளும் காயமடைந்துள்ளனர்.

ஜெருஸலத்தில் உள்ள அல்- அக்ஸா பள்ளிவாசல் இஸ்லாமியர்களின் புனித தளங்களில் ஒன்று என்பதோடு, யூதர்கள் அதனை தமது புனித தளமாகவும் கருதுகின்றனர்.

பலஸ்தீன்- இஸ்ரேல் முரண்பாடுகளை சமரசம் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள மத்திய கிழக்கு மற்றும் மேற்கு நாடுகள் அண்மைக் கால வன்முறைச் சம்பவங்களுக்கு கவலை வெளியிட்டுள்ளன.