November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பூமியை நோக்கி வரும் சீன ரொக்கெட்; எப்போது எங்கு விழும்?

( Photo : Twitter/AccuWeatherAstronomy)

விண்ணில் கட்டுப்பாட்டை இழந்து பூமியை சுற்றிக்கொண்டு இருக்கும் சீனாவின் “லாங் மார்ச் 5பி” ரொக்கெட்டின் பகுதி GMT நேரப்படி சனிக்கிழமையன்று 23.00 மணிக்குள் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழையும் சாத்தியம் உள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது.

எனினும் இது பூமியின் எந்த பகுதியில் விழும் என்பது துல்லியமாகக் கணிக்கப்படவில்லை.
சீனா விண்ணில் தங்களுக்கான ஆய்வு மையத்தை அமைக்கும் நோக்கில் விண்வெளி நிலையத்தின் 21 டன் எடை உடைய முதலாவது தொகுதியை “லாங் மார்ச் 5பி” என்ற ரொக்கெட் மூலம் கடந்த ஏப்ரல் மாத இறுதியில் விண்ணில் ஏவியது.

இந்த விண்வெளி நிலையம் பூமிக்கு மேலே 370 கிலோ மீட்டர் உயரத்தில் அமைக்கப்படவுள்ளது.
இதனிடையே குறித்த ரொக்கெட்டின் பாகம் கட்டுப்பாட்டை இழந்து பூமியை சுற்றி வருவதாகவும் அடுத்த சில நாட்களில் எப்போது வேண்டுமானாலும் பூமியில் விழக்கூடும் எனவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

100 அடி உயரமும் 16 அடி அகலமும் உடைந்த இந்த ரொக்கெட்டின் பாகம் பூமிக்குள் நுழையும்போது, வளிமண்டல உராய்வு காரணமாக எரிந்து சிதைந்து விடும். எனவே இதனால் பூமிக்கு பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகமிக குறைவு என சீனா அறிவித்துள்ளது.

இவ்வாறு சிதைவடையும் அதிகளவிலான சிதைவுகள் பூமியில் விழக்கூடிய வாய்ப்பு உள்ள போதும் பூமி 70 சதவிகிதம் நீரினால் சூழ்ந்துள்ளதனால் இந்த சிதைவுகள் கடலில் விழுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் காணப்படுவதாக சீன கூறுகின்றது.

 

இந்த விடயத்தில் சீனா அலட்சியமாக செயற்படுவதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லாயிட் ஆஸ்டின் குற்றம் சுமத்தியுள்ளார்.

மீண்டும் இதுபோன்ற ஒரு சூழ்நிலையை தடுக்க ரொக்கெட்டின் வடிவமைப்பை  சீனா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஹார்வர்ட்-ஸ்மித்சோனியன் வானியற்பியல் மையத்தின் வானியல் இயற்பியலாளர் ஜொனாதன் மெக்டொவல், குறிப்பிட்டுள்ளார்.

2020 ஆம் ஆண்டில், சீனாவின் மற்றொரு லாங் மார்ச் ரொக்கெட்டின் சிதைவுகள் ஐவரி கோஸ்டில் உள்ள கிராமங்களில் விழுந்தன.இதனால் உடமைகளுக்கு சேதம் ஏற்பட்டது.ஆனால் மனிதர்களுக்கு காயங்கள் அல்லது இறப்புகள் ஏற்படவில்லை.