July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மருத்துவமனையில்

கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரை வால்டர் ரீட் தேசிய இராணுவ மருத்துவ மையத்தில் சேர்த்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

புதன்கிழமை மாலை முதல் மனைவி மெலானியாவுடன் தனிமைப்படுத்தலுக்கு சென்றதாக கூறியிருந்த டொனால்ட் ட்ரம்பிடம், நேற்று வியாழக்கிழமை முதல் ‘லேசான கொரோனா அறிகுறிகள்’ தென்படத் தொடங்கின.

இதனையடுத்து வெள்ளை மாளிகையிலிருந்து முகக் கவசம் அணிந்தவாறு வெளியேறிய ஜனாதிபதி, அவரது மரைன் வன் ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு புறப்பட்டுச் சென்றார்.

“சோர்வடைந்த நிலையில் இருந்தாலும் நல்ல மனத் தைரியத்துடனேயே” அவர் காணப்பட்டதாக வெள்ளை மாளிகை கூறுகின்றது.

பரீட்சார்த்த நிலையில் உள்ள ஊசி மருந்தொன்றும் ரெம்டெஸ்விர் (Remdesvir) என்ற வைரஸ்-கொல்லி மருந்தும் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளன.

உதவியாளர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையிலேயே ஜனாதிபதிக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர்களுக்கும் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியானது.

மருத்துவமனையிலிருந்து பணியாற்றுவார்

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் ட்ரம்ப் இவ்வாறு தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

அடுத்த சில நாட்களுக்கு வால்டர் ரீட் மருத்துவ மையத்தில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்திலிருந்தே ட்ரம்ப் பணியாற்றவுள்ளார்.

வாஷிங்டன் டிசியின் புறநகர் பகுதியில் உள்ள வால்டர் ரீட் இராணுவ மருத்துமனையில் தான் அமெரிக்க ஜனாதிபதிகள் தங்களின் வருடாந்த மருத்துவப் பரிசோதனைகளை செய்துகொள்வது வழக்கம்.

அமெரிக்க அரசியலமைப்பின்படி, ஐனாதிபதி ஒருவர் பணியை செய்ய முடியாத அளவுக்கு சுகவீனமடைந்தால், அவரது அதிகாரங்கள் தற்காலிகமாக துணை ஜனாதிபதியிடம் செல்லும்.

அதாவது, டொனால்ட் ட்ரம்பின் உடல்நிலை மோசமடைந்தால் மைக் பென்ஸ் தான் பதில் ஜனாதிபதியாக பொறுப்பேற்க வேண்டும்.

ஆனால், ட்ரம்ப் தனது அதிகாரங்களை மைக் பென்ஸிடம் கையளிக்கவில்லை என்று வெள்ளை மாளிகை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.