July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘காணாமல் போன இந்தோனேசிய நீர்மூழ்கிக் கப்பலில் 72 மணிநேரத்திற்கு போதுமான ஒக்ஸிஜன் மாத்திரமே உள்ளது’

53 பணியாளர்களுடன் காணாமல் போன இந்தோனேசிய நீர்மூழ்கிக் கப்பலில் 72 மணிநேரத்திற்கு மட்டுமே போதுமான ஒக்ஸிஜன் உள்ளதாக இந்தோனேசிய கடற்படைத் தளபதி  தெரிவித்தார்.

வடக்கு பாலி கடற்பரப்பில் 53 பேருடன் காணாமல் போயுள்ள நீர்மூழ்கிக் கப்பலை இந்தோனேசியாவின் கடற்படை தேடி வருகிறது.

நீர்மூழ்கிக் கப்பலை கண்டுபிடிப்பதற்காக அவுஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூரிலிருந்தும் உதவியை இந்தோனேசிய இராணுவத் தளபதி ஹாடி தஜ்ஜான்டோ கோரியிருந்தார்.

இதற்கமைய சிங்கப்பூர், மலேசியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் கப்பல்களை அனுப்பி மீட்புப் பணியை வலுப்படுத்த தங்கள் உதவியை வழங்கியுள்ளன.

இந்த தேடலில் 400 க்கும் மேற்பட்ட பணியாளர்களும், ஐந்து கப்பல்களும், ஒரு ஹெலிகொப்டரும் ஈடுபட்டுள்ளதாக இந்தோனேசிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறிவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு கப்பலை சிங்கப்பூர் கடற்படை அனுப்பியுள்ளதாகவும் இது சனிக்கிழமை குறித்த பகுதியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“கே.ஆர்.ஐ.நங்கலா 402” எனப்படும் குறித்த நீர்மூழ்கிக் கப்பல், வடக்கு பாலி கடற்பரப்பில் டார்பிடோ பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது காணாமல் போனதாக இந்தோனேசிய கடற்படை தெரிவித்தது.

புதன்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் கப்பலுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டதாக இந்தோனேசிய இராணுவம் குறிப்பிட்டது.

காணாமல் போன குறித்த நீர்மூழ்கிக் கப்பலில் 72 மணிநேரத்திற்கு மட்டும் போதுமான ஒக்ஸிஜன் உள்ளதாக இந்தோனேசிய கடற்படை வெளியிட்டுள்ள தகவல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

50 முதல் 100 மீட்டர் ஆழத்தில் தேடல் குழுக்கள் செறிவு கூடிய காந்தத்தின் மூலத்தைக் கண்டறிந்துள்ளதாகவும், இது பாலி மற்றும் ஜாவா தீவுகளுக்கு இடையிலான கடற்பரப்பில் நீர்மூழ்கிக் கப்பலின் இருப்பிடத்திற்கான தடயங்களை வழங்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

எரிபொருள் தொட்டி சிதைவடைந்திருந்தால் நீர்மூழ்கிக் கப்பல் 500 முதல் 700 மீட்டர் வரை மூழ்கியிருக்கலாம் என மற்றொரு ஊகமும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளினால் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நீர்மூழ்கிக் கப்பல் 1981 இல் ஜெர்மனியில் கட்டப்பட்டதாக டி.என்.ஐ இந்தோனேசிய தேசிய ஆயுதப்படைகள் வலைத்தளம் தெரிவிக்கின்றது.

அத்தோடு, இந்தக் கப்பல் 2012 ஆம் ஆண்டு முதல், இரண்டு ஆண்டுகள் தென் கொரியாவில் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.