January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

53 பேருடன் காணாமல் போன இந்தோனேசிய நீர்மூழ்கிக் கப்பல்: பாலி கடற்பரப்பில் தேடும் பணி தீவிரம்!

(Photo : twitter/Marquis deseignelay)

வடக்கு பாலி கடற்பரப்பில் 53 பேருடன் காணாமல் போயுள்ள நீர்மூழ்கிக் கப்பலை இந்தோனேசியாவின் கடற்படை தேடி வருவதாக அந்நாட்ட இராணுவத் தளபதி புதன்கிழமை தெரிவித்தார்.

நீர்மூழ்கிக் கப்பலை கண்டுபிடிப்பதற்காக ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூரிலிருந்தும் உதவியை இந்தோனேசிய கடற்படை கோருவதாக இராணுவத் தளபதி ஹாடி தஜ்ஜான்டோ ராய்ட்டர்ஸ் செய்தி சேவையிடம் கூறியுள்ளார்.

“கே.ஆர்.ஐ.நங்கலா 402” எனப்படும் குறித்த  நீர்மூழ்கிக் கப்பல், வடக்கு பாலி கடற்பரப்பில் டார்பிடோ பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது காணாமல் போயுள்ளது.

புதன்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் கப்பலுடனான தொடர்பு துண்டிக்கப்படவிட்டதாக இந்தோனேசிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

பாலி கடற்பரப்பில் 96 கி.மீ தூரத்தில் தேடுதலை முன்னெடுத்துள்ளதாக இந்தோனேசிய இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.

குறித்த நீர்மூழ்கிக் கப்பல் 1981 இல் ஜெர்மனியில் கட்டப்பட்டதாக டி.என்.ஐ இந்தோனேசிய தேசிய ஆயுதப்படைகள் வலைத்தளம் தெரிவிக்கின்றது.

அத்தோடு, இந்தக் கப்பல் 2012 ஆண்டு முதல், இரண்டு ஆண்டுகள் தென் கொரியாவில் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியா தமது தேசிய பாதுகாப்பை மேம்படுத்த முயன்று வருகிறது, எனினும் அதன் சில பழமையான இராணுவ போக்குவரத்து சாதனங்களினால் ஆபத்தான விபத்துக்களைச் சமீபகாலமாக சந்தித்து வருகின்றது.