July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சாட் நாட்டு ஜனாதிபதி கிளர்ச்சியாளர்களுடனான மோதலில் பலி

photo:IDRISS DEBY ITNO_twitter

சாட் நாட்டு ஜனாதிபதி “இட்ரிஸ் டெபி இட்னோ” கிளர்ச்சியாளர்களுடனான மோதலில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு இராணுவம் அரச தொலைக்காட்சியில் அறிவித்துள்ளது.

டெபி “போர்க்களத்தில் இறையாண்மையை காப்பாற்றுவதற்காக தனது கடைசி மூச்சை சுவாசித்தார்” என்று அந்நாட்டு இராணுவ தளபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

கடந்த வார இறுதியில், நாட்டின் வடக்கில் இடம்பெற்ற கிளர்ச்சியாளர்களுடனான மோதல்களின் போது காயங்களுக்கு உள்ளான ஜனாதிபதி இட்ரிஸ் டெபி இறந்துவிட்டதாக குறித்த அறிவிப்பில் இராணுவம் தெரிவித்துள்ளது.

சாட் நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகாத போதிலும் இட்ரிஸ் டெபி ஆறாவது முறையாகவும் வெற்றி பெறுவார் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே இட்ரிஸ் டெபி இறந்து விட்டதாக செய்தி வந்துள்ளது.

1990 ல் ஆயுதமேந்திய எழுச்சியின் மூலம் இட்ரிஸ் டெபி ஆட்சிக்கு வந்தார்.

68 வயதான டெபி மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக சாட் நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்தார்.

இதன் மூலம் ஆபிரிக்காவில் மிக நீண்ட காலம் பணியாற்றிய அரசியல் தலைவர்களில் ஒருவராக இவர் உள்ளார்.

ஆபிரிக்காவின் சஹேல் பிராந்தியத்தில் ஜிஹாதி குழுக்களுக்கு எதிரான போரில் அவர் பிரான்ஸ் மற்றும் பிற மேற்கத்திய சக்திகளுடன் நீண்டகாலமாக கைகோர்த்து நின்றார்.

பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பைக் கொண்டுவருவதாக இட்ரிஸ் டெபி தமது தேர்தல் பிரசாரத்தின் போது வாக்குறுதியளித்தார்.

எனினும் கிளர்ச்சியாளர்களின் ஊடுருவலால் அவரது உறுதிமொழிகள் குறை மதிப்பிற்கு உட்பட்டன.

இந்நிலையிலேயே கிளர்ச்சியாளர்களுடனான மோதலில் இட்ரிஸ் டெபி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.