February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புதிய கொரோனா தொற்று; கர்ப்பம் தரிப்பதை ஒத்திவைக்குமாறு பிரேசில் பெண்களுக்கு அறிவுறுத்தல்

(Photo : web/hrw.org)

கொரோனா வைரஸ் தொற்றின் மோசமான காலம் கடந்து செல்லும் வரை கர்ப்பம் தரிப்பதை ஒத்திவைக்குமாறு பிரேசில் அரசாங்கம் பெண்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

கோவிட் -19 தொற்று இறப்புகளில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு கொரோனா தீவிரத்தன்மை தொடர்ந்தும் உயர்வடைந்து வருகின்றது.

இந்த நிலையில் மாறுபாடு அடைந்த கொரோனா வைரஸின் தாக்கம் கர்ப்பிணிப் பெண்களிடம் மிகவும் தீவிரம் அடைந்துள்ளதாகவும் பிரேசில் அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

“முடியுமான பெண்கள், கர்ப்பத்தை கொரோனா தொற்றுக்கு பிந்திய ஒரு அமைதியான சூழல் தோன்றும் வரை ஒத்திவைக்க வேண்டும்.இதனால் அவர்கள் மிகவும் ஆரோக்கியமான குழந்தைகளை பெற முடியும்” என்று பிரேசில் சுகாதார அமைச்சின் முதன்மை சுகாதார பராமரிப்பு செயலாளர் ரபேல் கமாரா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

எனினும் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களிடம் இதனை எதிர்பார்க்க முடியாது. ஆனால் இளம் பெண்கள், சிறிது காலம் காத்திருப்பது மிகச் சிறந்த விடயம்” என்று அவர் கூறினார்.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் அறிக்கைக்கு அமைய பிரேசிலில் கொரோனா தொற்று காரணமாக 368,749 இறப்புகள் பதிவாகியுள்ளன.

அத்தோடு அங்கு 13.8 மில்லியனுக்கும் அதிகமான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

வேகமாக பரவும் தன்மை கொண்ட புதிய கொரோனா தொற்று பிரேசிலில் அண்மைக்காலமாக அதிகரித்ததால் நாடு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளை சில பிரேசிலியர்கள் புறக்கணிப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.