photo:Miguel Díaz-Canel Bermúdez-twitter
ஏறக்குறைய 60 ஆண்டுகளாக காஸ்ட்ரோ குடும்பத்தினர் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களாக இருந்துவந்த நிலையில்,அதற்கு முற்றுப்புள்ளிவைக்கும் வகையில் ரவுல் காஸ்ட்ரோவின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாட்டை ஆளவரும் இளம் தலைமுறையினருக்கு பொறுப்புகளை வழங்கவுள்ளதாக ரவுல் காஸ்ட்ரோ கூறியுள்ளார்.
கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் கூடியபோதே இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
இ்ந்தக் கூட்டத்தில் ரவுல் காஸ்ட்ரோ பேசுகையில்; “ எனக்கு வழங்கப்பட்ட இலக்கை, பணியை முடித்துவிட்டதாக நான் மனநிறைவு கொள்கிறேன். இனி என்னுடைய மண்ணை எதிர்கால சந்ததியினரிடம் ஒப்படைக்கும் நம்பிக்கை வந்துள்ளது” என அறிவித்தார்.
ஆனால், தனக்குப்பின் யாரை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக நியமிக்கப்போகிறார் என்பது குறித்து ரவுல் காஸ்ட்ரோ அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், ரவுல் காஸ்ட்ரோவுக்கு அடுத்தஇடத்தில் இருக்கும் 60 வயதான மிகுல் டியாஸ் கேனல் அந்த பதவியை ஏற்பார் என தெரியவருகிறது.
ரவுல் காஸ்ட்ரோவின் இந்த அறிவிப்பால் கியூபாவில் 60 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த காஸ்ட்ரோ குடும்பத்தினரின் சகாப்தம் முடிவுக்கு வருகிறது.