July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இளவரசர் பிலிப்பின் இறுதி ஊர்வலம் வின்சர் கோட்டை வளாகத்தில் நடைபெறுகிறது

பிரிட்டிஷ் மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் கணவர், இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கு வின்சர் கோட்டை வளாகத்தில் உள்ள புனித ஜோர்ஜ் தேவாலயத்தில் நடைபெறுகிறது.

பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள இறுதி அஞ்சலி செய்தியில், இளவரசர் பிலிப்பின் “கருணை, நகைச்சுவை மற்றும் மனிதநேயம்” மற்றும் “அவரது நீண்ட ஆயுள் தங்களுக்கு பல வழிகளில் ஆசீர்வாதமாக இருந்தது என்று தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில் நீண்ட காலம் இளவரசராக இருந்தவர் என்ற பெருமைக்குரிய இளவரசர் பிலிப் தனது 99 ஆவது வயதில் கடந்த 9ம் திகதி காலமானார்.

இளவரசர் பிலிப்பிக்கு ராணியின் மீது இருந்த “அசைக்க முடியாத விசுவாசம்”, தேசத்திற்கான சேவை மற்றும் “தைரியம்” ஆகியவை அவரது இறுதி சடங்கின் பின்னரும் கொண்டாடப்படும் என்றும் அரண்மனை தெரிவித்துள்ளது.

இளவரசர் பிலிப் தனது இறுதி ஊர்வலம் எளிமையான முறையில் நடைபெறவேண்டும் என விரும்பினார்.
இளவரசர் பிலிப்புக்கு பிரிட்டனின் ரோயல் கப்பற்படையோடு இருந்த உறவு வின்சர் கோட்டையில் நடக்கவிருக்கும் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியின் மையக் கருவாக உள்ளது.

இளவரசர் பிலிப்பின் விரும்பத்திற்கு அமைய மாற்றி வடிவமைக்கப்பட்ட “லேன்ட்ரோவர்” காரில், அவரது உடல் வைக்கப்பட்டு இறுதி ஊர்வலம் நடைபெறுகிறது.

அத்தோடு இளவரசரின் விருப்பத்திற்கு அமைய, இறுதி சடங்கில் எந்த பிரசங்கமும் நடக்காது.

இளவரசரின் இறுதிச் சடங்கில் 730க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ள போதிலும், கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளின் படி புனித ஜோர்ஜ் தேவாலயத்தில் இறுதி அஞ்சலி செலுத்த இளவரசர் பிலிப்பின் பிள்ளைகள் மற்றும் அரச குடும்பத்தினர் உள்ளிட்ட 30 பேருக்கு மட்டுமே அனுமதி உள்ளது.

இதனிடையே இளவரசரின் மறைவுக்கு மௌன அஞ்சலி செலுத்தும் வகையில், அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு, லண்டனின் ஹீத்ரூ விமான நிலையத்தில் முதல் ஆறு நிமிடங்களுக்கு எந்த விமானமும் தரையிறங்கவோ பறக்கவோ செய்யாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.