(Photo : twitter /Erna Solberg)
நோர்வேயின் பிரதமர் எர்னா சோல்பெர்க்குக்கு கொரோனா விதிமுறையை மீறிய குற்றத்திற்காக 2352 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பெப்ரவரியில் ரிசார்ட்டில் 13 உறவினர்களுடன், நோர்வே பிரதமர் தனது 60 ஆவது பிறந்த தினத்தை விடுதி ஒன்றில் கொண்டாடியுள்ளார்.
இதன் போது இவர் கொரோனா கட்டுப்பாடுகளில் ஒன்றான சமூக இடைவெளியை பேணத் தவறியமைக்காக இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இவருடைய பிறந்தநாள் தொடர்பான காணொளிகள் உள்ளூர் ஊடகம் ஒன்றில் வெளியாகியதையடுத்து பொலிஸார் இது குறித்து விசாரணைகளை முன்னெடுத்ததுடன் அபராதம் விதித்துள்ளனர்.
அபராதத்தை ஏற்றுக்கொண்டுள்ள எர்னா சோல்பெர்க், தமது தவறுக்காக வருத்தத்தை வெளியிட்டுள்ளார்.
கொரோனா விதிமுறைகள் மீறப்படும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அபராதம் விதிக்கப்படாத போதிலும் சமூகக் கட்டுப்பாடுகள் குறித்த விதிகளில் பொது மக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்துவதற்காக அபராதம் விதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.