November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இளவரசர் பிலிப்: 8 நாட்களுக்கு சோகம்; கொரோனா கட்டுப்பாடுகளுக்கு நடுவே இறுதிச் சடங்கில் எத்தனைப் பேருக்கு அனுமதி?

பிரிட்டிஷ் இளவரசர் பிலிப்பின் மரணத்தை முன்னிட்டு பிரிட்டனில் 8 நாள் துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளதோடு, இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்குகள் அடுத்த சனிக்கிழமை இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

துக்கம் அனுஷ்டிக்கப்படும் காலத்தில் பிரிட்டிஷ் மகாராணியார் எந்தவொரு அரச கடமைகளிலும் ஈடுபட மாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளவரசர் பிலிப்பின் உடல் வின்ட்ஸர் காஸ்ட்ல் அரண்மணையில் வைக்கப்பட்டுள்ளதோடு, இறுதிச் சடங்குகள் செயின்ட் ஜோர்ஜ் பேராலயத்தில் நடைபெறவுள்ளது.

பிரிட்டன் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுக்கு அமைய உயிரிழந்த ஒருவரின் இறுதிச் சடங்கில் 30 பேரே கலந்துகொள்ள முடியும்.

இந்நிலையில், இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்பவர்களைத் தீர்மானிப்பது சிரமங்கள் இருக்கலாம் என பிரிட்டிஷ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், மிகவும் நெருங்கிய அரச குடும்ப உறுப்பினர்களே இறுதிச் சடங்கில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இறுதிச் சடங்கு நடைமுறைகள் தொடர்பில் மகாராணி, உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் பிரிட்டிஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இளவரசர் பிலிப்பின் மரணத்துக்கு மக்கள் அஞ்சலி செலுத்தி வருவதோடு, பாக்கிங்ஹாம் மாளிகைக்கு வெளியே அனுதாபக் குறிப்புக்களை பதிவுசெய்வதற்கான குறிப்பேடு ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது.