July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரிட்டிஷ் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் காலமானார்!

photo:By PolizeiBerlin (Own work, CC BY-SA 4.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=100022285)

பிரிட்டிஷ் மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் கணவர், இளவரசர் பிலிப் தனது 99 ஆவது வயதில் காலமானார்.

“மேன்மை தங்கிய எடின்பரோ கோமன் இளவரசர் பிலிப் வின்ட்ஸர் காஸ்ட்ல் அரண்மணையில் இன்று காலை காலமானார்” என்று பாக்கிங்ஹாம் மாளிகை அறிவித்துள்ளது.

1921 ஜூன் 10 ஆம் திகதி கிரேக்கத் தீவான கோர்பு-வில் இளவரசர் பிலிப் பிறந்தார்.

கிரீஸ் மற்றும் டென்மார்க் இளவரசரான அன்ரூ மற்றும் விக்டோரியா மகாராணியின் பரம்பரையை சேர்ந்த இளவரசி அலெய்ஸ் ஆகியோரின் மகனான இளவரசர் பிலிப், 1947 இல் அப்போதைய பிரிட்டிஷ் இளவரசி இரண்டாம் எலிசபெத்துடன் திருமண பந்தத்தில் இணைந்தார்.

இளவரசர் பிலிப்- மகாராணி எலிசபெத் தம்பதியினருக்கு இளவரசர் சார்ல்ஸ், இளவரசி ஆன், இளவரசர் அன்ரூ, இளவரசர் எட்வர்ட் ஆகிய 4 பிள்ளைகள் உள்ளனர்.

சுமார் 73 ஆண்டுகள் திருமண வாழ்க்கையை கொண்ட அவர்களுக்கு 8 பேரப் பிள்ளைகளும் 10 கொள்ளுப் பேரப் பிள்ளைகளும் உள்ளனர்.

அண்மையில் நோய்வாய்ப்பட்ட இளவரசர் பிலிப், ஒரு மாதகாலம் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றபின் கடந்த மாதம் அரண்மணைக்கு திரும்பியிருந்தார்.

ஏற்கனவே இருந்த இருதயம் சம்பந்தப்பட்ட நோய்க்காக அவருக்கு அண்மையில் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

மறைந்த எடின்பரோ கோமகனின் மறைவுக்கு பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்ஸன் உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் உலக அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் தமது அனுதாபங்களைத் தெரிவித்துவருகின்றனர்.