Photo-Ministry of Hajj and Umrah_twitter
கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை கொண்டவர்கள் மட்டுமே மக்காவிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என சவுதி அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனர்.
புனித நகரமான மக்காவில் உள்ள கிராண்ட் மசூதிக்கு ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் உலகின் பல பாகங்களில் இருந்தும் பயணிக்கின்றனர்.
எனினும் கொரோனா தொற்று பரவல் காரணமாக மக்கா யாத்திரைக்கு சவுதி அரசினால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தற்போது, உம்ரா பிரார்த்தனைகளை மேற்கொள்ள “கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை கொண்ட மக்களுக்கு” மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
COVID-19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை பெற்ற நபர்கள், யாத்திரை செய்வதற்கு குறைந்தது 14 நாட்களுக்கு முன்னர் தடுப்பூசியின் ஒரு டோஸ்ஸை பெற்றவர்கள் அல்லது வைரஸிலிருந்து மீண்டவர்களுக்கு அந்த சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு சவுதி அரேபியாவில் 10,000 பேர் மட்டுமே ஹஜ் கடமையை நிறைவேற்ற அனுமதிக்கப்பட்டனர்,
இது 2019 ஆம் ஆண்டில் ஹஜ் யாத்திரையை மேற்கொண்ட உலகெங்கிலும் உள்ள 2.5 மில்லியன் முஸ்லிம்களுடன் ஒப்பிடும் போது மிகக் குறைவாகும்.
சவூதி அரேபியாவில் 393,000 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுகள் மற்றும் வைரஸால் 6,700 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.