அவுஸ்திரேலிய-நியூசிலாந்துக்கு ஆகிய நாடுகளுக்கிடையில் பயணிப்பதற்கு ‘தனிமைப்படுத்தல்’ அவசியம் இல்லை என நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் அறிவித்துள்ளார்.
இந்த நடைமுறை எதிர்வரும் ஏப்ரல் 19 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து நாடுகள் தமது நடவடிக்கைகள் மூலம் கொரோனா தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளன.
கடந்த ஒக்டோபர் மாதத்திலிருந்து, நியூசிலாந்திலிருந்து செல்லும் பயணிகள் தனிமைப்படுத்தப்படாமல் அவுஸ்திரேலிய மாநிலங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர்.
இதனிடையே, அங்கு வைரல் தொற்று மீண்டும் அதிகரித்ததையடுத்து கடந்த மார்ச் மாதம் இரு நாடுகளும் தங்கள் எல்லைகளை மூடியதுடன், நாட்டுக்குள் வரும் பயணிகளுக்கு கட்டாய தனிமைப்படுத்தலை கொண்டு வந்திருந்தன.
இந்த நிலையில், அவுஸ்திரேலியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையே பிரஜைகள் கட்டுப்பாடுகள் இன்றி சென்று வரக் கூடிய விதத்தில் ‘பரஸ்பர பயண’ வலயம் ஒன்று தொடங்கப்படவுள்ளது.
இந்த ‘பரஸ்பர பயண’ வலயம் ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை இரவு 11.59 மணி முதல் தொடங்கும் என்று நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்தார்.
இந்த முறையின் ஊடாக, தனிமைப்படுத்தலை முடிவுக்கு கொண்டுவருவதற்கான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், ஆபத்து குறைவாக இருப்பதாகவும் நியூசிலாந்து அமைச்சரவை நம்புவதாக அவர் கூறினார்.
இரு நாடுகளிலும் கொரோனா தொற்று பரவல் காரணமாக பல மாதங்கள் ஏற்பட்ட பின்னடைவுகளுக்குப் பிறகு இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.