January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

2036 வரை ஆட்சியில் நீடிப்பதை உறுதி செய்யும் சட்டத்தில் கையொப்பமிட்டார் ரஷ்ய ஜனாதிபதி

file photo: Twitter/ President of Russia

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் 2036 ஆம் ஆண்டு வரை தான் பதவியில் நீடிப்பதை அனுமதிக்கும் விதத்தில் கொண்டுவரப்பட்ட சட்டத்திற்கு கையொப்பம் இட்டுள்ளார்.

புடினின் பதவிக் காலம் 2024 ஆம் ஆண்டில் நிறைவடையவுள்ள நிலையில், அவர் மேலும் இரண்டு தவணைகளுக்காக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை இந்த சட்டம் அனுமதிக்கிறது.

கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அமையவே, இந்த சட்டம் நடைமுறைக்கு வருகின்றது.

இதற்கமைய, தற்போது 68 வயதாகும் புடினை 83 வயது வரை ஜனாதிபதியாக அதிகாரத்தில் இருக்கச் செய்யும் விதத்தில் கடந்த ஆண்டில் புதிய திருத்தம் கொண்டுவரப்பட்டது.

ஏற்கனவே, பிரதமர் பதவியை இரண்டு தடவைகள் வகித்துள்ள புடின், பிரதமரை விட அதிகாரம் படைத்த பதவியாக ஜனாதிபதி பதவி மாற்றப்பட்ட பின்னர் ஜனாதிபதி பதவியையும்
தொடர்ச்சியாக இரண்டு தடவைகள் வகித்து வருகிறார்.

புதிய சட்டத்தின்படி, எதிர்காலத்தில் வரக்கூடிய எந்தவொரு ஜனாதிபதியும் இரண்டு தடவைகளே பதவி வகிக்க முடியும். ஆனால், புடின் மட்டும் மேலும் இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக நீடிக்க முடியும்.

அத்தோடு, வெளிநாட்டு பிரஜாவுரிமை கொண்டிருந்த எந்தவொரு நபரும் ரஷ்ய ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது.

விளாடிமிர் புடினை ஆட்சியில் வைத்திருக்கும் விதமான புதிய திருத்தத்தை “அரசியலமைப்பு மூலமான சதி” என்று விமர்சகர்கள் வர்ணித்துள்ளனர்.