(Photo: The Sun Nigeria/Twitter)
மேற்கு ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் 1,800 இற்கும் மேற்பட்ட கைதிகள் சிறையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இமோ மாகாணத்தின் தென்கிழக்கு நகரமான ஓவெரியில் உள்ள சிறைச்சாலையில் இருந்தே இவ்வாறு கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
நைஜீரியாவில் தடை செய்யப்பட்ட இனவாதக் குழுவான ‘பியாஃப்ரா’ வின் பழங்குடி மக்கள் இந்த தாக்குதலை நடத்தியதாக பொலிஸார் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் துப்பாக்கி தாரிகளால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டையடுத்து, கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தப்பியோடியவர்களில் ஆறு கைதிகள் திரும்பி வந்துள்ளதுடன், 35 பேர் தப்பிச் செல்ல மறுப்பு தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இந்தத் தாக்குதல் சம்பவத்தை கண்டித்து ‘அராஜகவாதிகள்’ மேற்கொண்ட ‘பயங்கரவாத செயல்’ என்று நைஜீரியாவின் ஜனாதிபதி முஹம்மது புஹாரி தெரிவித்துள்ளார்.
மேலும் தாக்குதல் நடத்தியவர்களையும் தப்பித்த கைதிகளையும் பிடிக்க பாதுகாப்புப் படையினருக்கு நைஜீரிய ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
எனினும் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் பியாஃப்ரா பிரிவினைவாத குழுவின் பழங்குடி மக்களின் செய்தித் தொடர்பாளர், எங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் தொடர்புடைய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்று குறிப்பிட்டுள்ளார்.