பங்களாதேஷில் பொது முடக்கல் அறிவிக்கப்பட்டதையடுத்து, நகரைவிட்டு வெளியேற முயன்ற மக்களை ஏற்றிச்சென்ற படகொன்று விபத்துக்குள்ளானமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டாக்காவின் தெற்கே ஷிதலக்ஷ்ய நதியில் சுமார் 50 பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று சரக்குக் கப்பலுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நீரில் படகு மூழ்கியதில் குறைந்தது 26 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு, திங்கட்கிழமை வரை 20 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மேலும் சிலரைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பங்களாதேஷில் கொவிட் -19 தொற்று அதிகரித்து வரும் நிலையில், திங்கட்கிழமை முதல் ஒரு வார காலத்திற்கு நாடு தழுவிய முடக்கத்தை அரசாங்கம் அறிவித்ததை அடுத்து, நகரத்தை விட்டு வெளியேற முயன்ற அதிகளவான மக்களால் படகு நிரம்பியிருந்தது.
தலைநகர் டாக்காவிலிருந்து 20 கிலோமீட்டர் (12 மைல்) தொலைவில் உள்ள மத்திய தொழில்துறை நகரமான நாராயங்கஞ்சில் இருந்து அருகிலுள்ள மாவட்டமான முன்ஷிகஞ்ச் நகருக்குப் புறப்பட்டு சிறிது நேரத்தில் படகு விபத்தை சந்தித்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பயணிகளில் சிலர் கரைக்கு நீந்தி வந்துள்ளனர்.நேற்றிரவு குறித்த பகுதியில் ஏற்பட்ட புயலால் மீட்புப் பணிகள் தடைப்பட்ட நிலையில் இன்று மீண்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
ஞாயிற்றுக்கிழமை பங்களாதேஷில் நாளாந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 7,087 ஆக பதிவானது.
அத்தோடு அங்கு இதுவரை 637,364 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியும் 9,266 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
நூற்றுக்கணக்கான ஆறுகளால் சூழப்பட்ட தாழ்வான நாடான பங்களாதேஷில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மக்கள் படகு விபத்துகளில் இறக்கின்றனர்,
குறிப்பாக நாட்டின் தெற்கு கடலோரப் பகுதியில், மில்லியன் கணக்கான மக்கள் போக்குவரத்திற்காக படகுகளைப் பெரிதும் நம்பியுள்ளனர்.
மோசமாகப் பராமரிக்கப்படும் கப்பல்கள் மற்றும் படகுகள் காரணமாக அந்நாட்டு மக்களின் படகு பயணம் உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் முன்னெடுக்கப்படுவதாக நிபுணர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.