“உலகின் மிகவும் வறிய நாடுகளுக்கு விரைவாக கொரோனா தடுப்பூசியை வழங்குமாறு” பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார்.
100 பேர் கலந்து கொண்ட செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்கா தேவாலயத்தில் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தின விசேட திருப்பலியில் உரையாற்றியபோதே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
உலகின் 1.3 பில்லியன் கத்தோலிக்கர்கள் கொரோனா தொற்றுக்கு மத்தியில் இரண்டாவது ஆண்டாக உயிர்த்த ஞாயிறு தின பிரார்த்தனைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த புனிதமான தினத்தில் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டகை தனது செய்தியில் உலகின் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கும், புலம்பெயர்ந்தவர்களுக்கும், பொருளாதார இன்னல்களை எதிர்கொள்ளும் மக்களுக்கும் சிரியா, ஏமன் மற்றும் லிபியா.போன்ற போர்ச் சூழலில் வசிப்பவர்கள் மீதும் கவனம் செலுத்தியுள்ளார்.
தொற்றுநோய் இன்னும் பரவி வருகிறது.அதே நேரத்தில் குறிப்பாக “ஏழைகளுக்கு” இந்த தொற்று சமூக மற்றும் பொருளாதார நெருக்கடியை கடுமையாக்கி உள்ளதாகவும் பாப்பரசர் குறிப்பிட்டார்.
மேலும்,ஏழ்மையான நாடுகளுக்கு தடுப்பூசிகளை விநியோகிப்பதில் ஏற்படும் தாமதத்தை சமாளிக்க சர்வதேச சமூகத்திற்கு பாப்பரசர் அழைப்பு விடுத்தார்.
2013 ல் பாப்பரசராக பதவி ஏற்றது முதல் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து கவனம் செலுத்திய பிரான்சிஸ், செப்டம்பர் மாதம் ஐ.நா பொதுச் சபையில் தடுப்பூசி பதுக்கலுக்கு எதிராக பணக்கார நாடுகளுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தார்.
உலகெங்கிலும் ஆயுத மோதல்கள் நிறுத்தப்படாமை கவலைக்குரியது என தெரிவித்ததுடன், சிரியாவில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரவும் அவர் அழைப்பு விடுத்தார்.
யேமனில் ஏற்பட்டுள்ள நிலை தொடர்பில் உலகம் மௌனமாக உள்ளதையிட்டு வருத்தத்தை வெளியிட்ட அவர், ஆபிரிக்காவில் இடம்பெறும் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறும் வலியுறுத்தினார்.
“உலகில் இன்னும் அதிகமான போர்கள் மற்றும் அதிகமான வன்முறைகள் உள்ளன,” என்றும் பிரான்சிஸ் இதன்போது தெரிவித்துள்ளார்.