பங்களாதேஷில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதனால் நாளை திங்கட்கிழமை முதல் ஒரு வாரத்திற்கு நாடு தழுவிய ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என அந் நாட்டு அரசு அறிவித்துள்ளது.
பங்களாதேஷில் புதிதாக 6,830 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டதையடுத்தே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அவாமி லீக் பொதுச் செயலாளரும் பங்களாதேஷின் சாலை போக்குவரத்து மற்றும் மேம்பாலங்கள் துறை அமைச்சரான ஒபைதுல் குவாடர், இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
‘இந்த ஊரடங்கின் போது ஒவ்வொரு அலுவலகமும் நீதிமன்றமும் மூடப்படும் எனவும், ஆனால் தொழில்கள் மற்றும் ஆலைகள் சுழற்சி முறையில் தொடர்ந்து செயல்படும் எனவும் மாநில பொது நிர்வாக அமைச்சர் ஃபர்ஹாத் ஹூசைன் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு ஆலைகள் மூடினால் தொழிலாளர்கள் வீட்டுக்கு செல்ல நேரிடும் என்பதால் சுழற்சி முறையில் செயல்படும்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷில் கடந்த 24 மணி நேரத்தில் 6,830 பேருக்கு கொவிட்- 19 தொற்று ஏற்பட்டுள்ளது.
இதன் மூலம் நாட்டில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,24,594 ஐ எட்டியுள்ளது. வெள்ளிக்கிழமை காலை முதல் 24 மணிநேரத்தில் 50 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.