மறைந்த தன்சானியா நாட்டு ஜனாதிபதி ஜோன் மகுஃபுலியின் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் 45 பேர் உயிரிழந்துள்ளதுடன், 37 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தன்சானியா நாட்டு ஜனாதிபதி ஜோன் மகுஃபுலி கடந்த 17 ஆம் திகதி காலமானார்.
தன்சானியா மக்களின் செல்வாக்கைப் பெற்ற இவரின் மரணம் அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்த
நிலையில், ஜனாதிபதி ஜோன் மகுஃபுலியின் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக நாட்டின் பல நகரங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டது.
இறுதியாக கடந்த வாரம் அவரின் பூதவுடல் ஹிக்ரு மைதானத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த போது இலட்சக்கணக்கான மக்கள் மைதானத்தில் கூடியிருந்தனர்.
இந்த சன நெரிசல் மற்றும் ஒக்ஸிஜன் பற்றாக்குறையினால் 45 பேர் இறந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸ் அதிகாரி ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார்.
ஏராளமானவர்கள் மதில்களில் ஏறி மைதானத்திற்குள் செல்ல முயன்றதையடுத்து இந்த சன நெரிசல் அதிகரித்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, தாய் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் சம்பவத்தில் உயிரிழந்ததாக பொலிஸார் ஆரம்பத்தில் செய்தி வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/AntiMuhoozi/status/1374723641003307008?s=20
இந்த சம்பவம் தன்சானியா நாட்டில் மேலும் சோகத்தை அதிகரித்துள்ளது.
ஆப்பிரிக்காவின் மிக முக்கியமான கொவிட் -19 மறுப்பாளர்களில் ஒருவரான ஜோன் மகுஃபுலி இதய நோய் காரணமாக உயிரிழந்ததாக அரசாங்கம் தெரிவித்தது.
எனினும் அவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்திருக்கலாம் என எதிர்க்கட்சி சந்தேகம் வெளியிட்டுள்ளது.
மகுஃபுலிக்கின் மறைவுக்குப் பிறகு துணை ஜனாதிபதியாக பணியாற்றிய சாமியா சுலுஹு ஹாசன், நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார்.