July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வழமைக்கு திரும்பியது சூயஸ் கால்வாய்; 113 கப்பல்கள் மீண்டும் பயணத்தை ஆரம்பித்தன

உலகின் மிகவும் பரபரப்பான சூயஸ் கால்வாயில் கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குப் பின்னர் கப்பல் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.

சூயஸ் கால்வாயில் கடந்த 6 நாட்களாக ஏற்பட்ட முடக்கம் உலகளாவிய பேசும் பொருளான அதேவேளை, கச்சா எண்ணெய் விலையிலும் ஏற்றத்தை தோற்றுவித்தது.

ஜப்பானுக்கு சொந்தமான ‘எவர்கிவன்’ கப்பல், சீனாவிலிருந்து 18,300 சரக்கு கன்டெய்னர்களுடன் மலேசியா வழியாக நெதர்லாந்தின் ராட்டர்டாமுக்கு (Rotterdam) செல்வதற்கான பயணத்தை முன்னெடுத்திருந்தது.

‘எவர் கிவன்’ என்பது கப்பலின் அதிகாரப்பூர்வ பெயர், ஆனால் இந்த கப்பலை ‘எவர்க்ரீன் மரைன்’ என்ற தாய்வான் நிறுவனம் இயக்குகிறது.

400 மீட்டர் நீளமுள்ள இந்த கப்பல் சுமார் 2,20,000 டன் மொத்த எடையுடையது.

கடந்த செவ்வாய்க்கிழமை சூயஸ் கால்வாயின் ஊடாக பயணித்த போது அங்கு வீசிய புயல் காரணமாக நிலைதடுமாறி கால்வாயின் குறுக்கே சிக்கிக்கொண்டது.

சூயஸ் கால்வாய் 193 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. கப்பல் சிக்கிய இடத்தில் கால்வாயின் அகலம் 220 மீட்டர்கள்.

இதனால் சூயஸ் கால்வாய் ஊடான கப்பல் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டது.

பல நாடுகளுக்கு சொந்தமான 320 கப்பல்கள் சூயஸ் கால்வாய் கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டிருந்தன.
கப்பலை மீட்க வாரங்கள் ஆகலாம் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

சூயஸ் கால்வாயில் ஏற்பட்டுள்ள முடக்கம் தொடர்ந்தால்  சர்வதேச பொருளாதாரம் மோசமாக பாதிக்கும் என அச்சம் வெளியிடப்பட்டது.

 

எவர்கிவன் கப்பல் மிதக்கவிடப்பட்டது எவ்வாறு?

சூயஸ் கால்வாயில் கப்பல் சிக்கியபோது, முன்பகுதி முற்றிலுமாக கரையில் மோதியிருந்தது. பின்பகுதிக்கும் கரைக்கும்  4 மீட்டர் இடைவெளி காணப்பட்டது.

அதை மீட்கும் பணியில் சூயஸ் கால்வாய் ஆணையமும் நெதர்லாந்தைச் சேர்ந்த ஸ்மிட் என்ற நிறுவனமும் ஈடுபடத் தொடங்கின.

தண்ணீரில் மிதக்கும்போது சுமார் 15 மீட்டர் அளவுக்கு கப்பலின் அடிப்பகுதி நீரில் மூழ்கியிருக்கும். எனவே அகழ்வு உபகரணங்கள் மூலம் மணல் தரையில் கப்பல் சிக்கிக் கொண்ட பகுதி தோண்டப்பட்டு வந்தது.

அமெரிக்க கடற்படை நிபுணர்கள் ஆலோசனைகளை வழங்கினார்கள்.

பின்பகுதியில் திறன்வாய்ந்த இழுவைப் படகுகள் கப்பலை ஒரு புறமாகத் தள்ளியும் மறுபுறமாக இழுத்தும் நேரே திருப்பும் பணியில் ஈடுபட்டன.

ஒட்டுமொத்த முயற்சியால் கப்பலின் பின்பகுதி கரையில் இருந்து தள்ளப்பட்டது. கரையிலும் சேற்றிலும் சிக்கியிருந்த முன்பகுதி படிப்படியாக விடுவிக்கப்பட்டது.

அதிகாரிகளின் முயற்சியால் கப்பல் திங்களன்று சூயஸ் கால்வாயின் மணல் கரையில் இருந்து மீட்கப்பட்டு மிதக்கவிடப்பட்டுள்ளதாக கடல்சார் தொழில்நுட்ப பணிகளை மேற்கொண்ட “இன்ச் கேப்” என்ற நிறுவனம் தகவல் வெளியிட்டது.

இந்த முயற்சி தோல்வியடைந்திருந்தால், படகில் இருந்து சரக்கு மற்றும் எரிபொருளை அகற்றி படகை நகர்த்துவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கும்.

தற்போது, சூயஸ் கால்வாயில் அகப்பட்டிருந்த கப்பல் முழுமையாக மீட்கப்பட்டு, அங்கு கப்பல் போக்குவரத்து வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

அத்தோடு  கடல் வழி பாதை தடைப்பட்டதன் காரணமாக அணிவகுத்து நின்ற 422 கப்பல்களில் 113 கப்பல்கள் சூயஸ் கால்வாயை கடந்துள்ளன.

மொத்த கப்பல்களும் கால்வாயை கடந்து செல்ல 3 நாட்களுக்கு மேல் ஆகலாம் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூயஸ் கால்வாய் முக்கியத்துவம் வாய்ந்தது ஏன்?

மத்தியதரைக் கடலைச் செங்கடலுடன் இணைக்கிறது மற்றும் ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான குறுகிய தூரமுள்ள கடல் வழியாக சூயஸ் கால்வாய் அமைந்துள்ளமையால் உலகளாவிய வர்த்தக சரக்கு கப்பல்களில் சுமார் 12% மானவை இவ்வழியாகவே பயணிக்கின்றன.

இதன் ஊடாக ஒவ்வொரு நாளும் 6.5 பில்லியன் டொலர் உலகளாவிய வர்த்தகம் நடைபெறுகிறது.

இது தவிர வேறு வழியில் ஆசியா – ஐரோப்பா இடையே பயணிக்கவேண்டுமானால் ஆப்ரிக்க கண்டத்தின் தெற்கு முனையான நன்னம்பிக்கை முனையைச் சுற்றி கப்பல்கள் பயணிக்க வேண்டும்.

இதற்கு சுமார் இரண்டு வார காலம் கூடுதல் காலம் எடுப்பதுடன் எரிபொருள், உணவுக் கையிருப்பு ஆகியவையும் அதிகமாக தேவைப்படும்.

எனவே கப்பல்கள் இதன் ஊடாக பயணிப்பது அவற்றின் காலத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்துகின்றது.

சூயஸ் கால்வாயில் மற்றொரு சம்பவம்

சூயஸ் கால்வாய் 193 கி.மீ (120 மைல்) நீளம் கொண்டது மற்றும் மூன்று இயற்கை ஏரிகளை உள்ளடக்கியது.2015ஆம் ஆண்டில், பிரதான நீர்வழிப்பாதையை ஆழப்படுத்தியதன் மூலம் எகிப்து அரசாங்கம் கால்வாயை விரிவாக்கம் செய்தது.

இதேபோன்று 2017ஆம் ஆண்டில், மற்றுமொறு ஜப்பானிய கொள்கலன் கப்பல் இயந்திரக் கோளாறு காரணமாக இக்கால்வாயில் சிக்கியது. எனினும் எகிப்திய அதிகாரிகள் இழுபறிப் படகுகளின் உதவியோடு சில மணி நேரங்களுக்குள் மீண்டும் அதை மிதக்க வைத்தமை நினைவு கூரத்தக்கது.