July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உறுதிப்படுத்தப்படாத கொரோனா சிகிச்சை முறையை பகிர்ந்த வெனிசூவேலா ஜனாதிபதியின் பேஸ்புக் கணக்கு முடக்கம்!

கொவிட்-19 பற்றி தவறான தகவல்களை பரப்புவதற்கு எதிரான ஃபேஸ்புக்கின் கொள்கைகளை மீறியதற்காக வெனிசூவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் பேஸ்புக் பக்கம் 30 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தின் இந்த செயற்பாட்டை “டிஜிட்டல் சர்வாதிகார வாதம்” என்று வெனிசூவேலா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தைம் செடியிலிருந்து தயாரிக்கப்படும் கார்வாடிவிர் (Carvativir) என்ற பாரம்பரிய வாய்வழி மருந்து கொரோனாவிற்கு எதிராக செயற்படும் என தெரிவித்து நிக்கோலஸ் மதுரோ தமது பேஸ்புக் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார்.

எனினும் மருத்துவ ரீதியான எந்த ஆதாரத்தையும் அவர் வெளியிடவில்லை.

கொரோனா வைரஸ் தொற்று நோயை குணப்படுத்தக்கூடிய மருந்துகள் எதுவும் தற்போது இல்லை உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல்கள் கூறுகின்ற நிலையில், தவறான தகவலை பரப்பியதால் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் கணக்கை முடக்கியதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தின் நடவடிக்கைக்கு கண்டனம் வெளியிட்டுள்ள வெனிசூவேலாவின் தகவல் அமைச்சு, “உலக நாடுகளில் தங்கள் சட்டத்தை சுமத்த விரும்பும் அதிநவீன நிறுவனங்கள் பயன்படுத்தும் டிஜிட்டல் சர்வாதிகாரத்தை நாங்கள் இந்த செயற்பாட்டின் ஊடாக காண்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.