October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பியனுப்பும் முடிவுக்கு எதிராக ஜெர்மனியில் ஆர்ப்பாட்டம்

தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் பலரை திருப்பியனுப்புவதற்கான முடிவை ஜெர்மனி அரசாங்கம் எடுத்துள்ளமை அந்த நாட்டில் வாழ்கின்ற இலங்கை தமிழர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,இந்த நடவடிக்கைக்கு எதிராக  ஜெர்மனியில் வாழும் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜெர்மனியில் வசித்து வரும் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களின் வதிவிட அனுமதியைப் புதுப்பித்துக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அதற்காக வந்த 100 பேர் வரையிலானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களின் கையடக்க தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், உறவினர்களை அவர்கள் தொடர்புகொள்ள முடியாத நிலைமையை உருவாக்கியுள்ளனர்.

இந்நிலையில்,இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கு முன்னால் ஜெர்மனியில் வாழும் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

சிறைக்கு முன்னால் நூற்றுக்கணக்கில் குவிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இம்மாதம் 30 ஆம் திகதியுடன் சுமார் 100 பேர் வரையிலான தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் ஜெர்மனியிலிருந்து வெளியேற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே ஜெர்மனியில் இருக்கும் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் பலரை திருப்பியனுப்பும் முடிவை அந்நாட்டு அரசாங்கம் கைவிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் ஜெர்மனியில் இருந்து வெளியேற்றப்படுவதை உடனடியாக நிறுத்துமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிரிமென் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் ஊடாக ஜெர்மனி அரசாங்கத்திடம்  வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.