January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தோனேஷியாவில் கிறிஸ்தவ தேவாலயமொன்றுக்கு அருகில் குண்டுத் தாக்குதல்

இந்தோனேஷியா மகஸ்ஸார் நகரில் கிறிஸ்தவ தேவாலயமொன்றுக்கு அருகில் குண்டு வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இது தற்கொலைக் குண்டுத் தாக்குதலாக இருக்கலாம் என்று அந்நாட்டு பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

குருத்தோலை ஞாயிறு தினமான இன்று, அங்குள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்ற நிலையிலேயே இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளொன்றில் வந்த நபரொருவர் தேவாலயத்திற்குள் நுழைய முற்பட்டதாகவும், இதன்போது அங்கிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவரை தடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்தே அந்த இடத்தில் குண்டு வெடித்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

அந்த இடத்தில் உடல் பாகங்கள் கிடப்பதாகவும், அவை இன்னும் அடையாளம் காணப்படவில்லை எனவும் இந்தோனேஷிய பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தோனேஷியாவில் தேவாலயங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களின் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.