July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புகலிடக் கோரிக்கையாளர்கள்: பிரிட்டன் கொண்டுவரவுள்ள ‘புதிய மாற்றங்கள்’ என்ன?

(Photo: UK Home Office)

பிரிட்டனின் புகலிட நடைமுறைகள் தொடர்பில் கொண்டுவரப்படவுள்ள புதிய மாற்றங்களை அகதிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் விமர்சித்துள்ளன.

பிரிட்டனுக்குள் சட்டவிரோதமாக நுழைவோர் நாட்டுக்குள் தொடர்ந்தும் தங்கியிருக்க முடியாதவாறு கொண்டுவரப்படும் மாற்றங்கள் “மனிதத் தன்மையற்றது” என்று செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.

ஆனால், தாம் கொண்டுவரும் மாற்றங்கள் புகலிடக் கோரிக்கைக்கான “சட்டபூர்வ” காரணங்கள் உள்ளோரை பாதுகாக்கும் நோக்கம் கொண்டவை என்று பிரிட்டனின் உள்துறைச் செயலாளர் பிரித்தி பட்டேல் தெரிவித்துள்ளார்.

புதிய நடைமுறையில் வரவுள்ள மாற்றங்கள்

புகலிடக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்களை – அவர்கள் நாட்டுக்குள் “எப்படி வந்தார்கள்” என்பதை அடிப்படையாகக் கொண்டு பரிசீலிக்கும் நடைமுறையை பிரிட்டன் முதன்முறையாக கொண்டுவரவுள்ளது.

புதிய திட்டத்தின் கீழ், புகலிடக் கோரிக்கையாளர் ஒருவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் – அவர் சட்டவிரோதமான வழிகளில் பிரிட்டனுக்குள் நுழைந்திருந்தால்- “விரைவாக” வெளியேற்றப்படுவார்.

மேன்முறையீட்டு விசாரணைகள் விரைவுப்படுத்தப்படும் விதத்தில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படப்படும்.

துன்புறுத்தல்கள் மற்றும் வன்முறைகளில் இருந்து தப்பி “சட்டபூர்வமான குடியேற்ற” விதிகளின் கீழ் பிரிட்டனுக்குள் வருவோருக்கு நாட்டுக்குள் காலவரையின்றி தங்குவதற்கான அனுமதி கிடைக்கும்.

குற்றக் கும்பல்களுக்கு பணம் செலுத்தி பிரிட்டனுக்குள் வருவோருக்கு நாட்டில் தங்கியிருப்பதற்கு தற்காலிக அனுமதியே வழங்கப்படும். அவர்களை வெளியேற்றுவதற்கான விசாரணைகள் தொடர்ந்து நடக்கும்.

அடுத்து, வயதை மறைத்து சிறுவர்களைப் போல் போலி விண்ணப்பங்களை மேற்கொள்வோரை கண்டுபிடிக்க “கடுமையான” வயதுச் சோதனை நடைமுறைகள் கொண்டுவரப்படும்.

புகலிடக் கோரிக்கையாளர்களை நாட்டுக்குள் கொண்டுவரும் “மனிதக் கடத்தல்காரர்களுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்படலாம்.

புதிய மாற்றங்கள் தொடர்பான முழுமையான விபரங்களை பிரிட்டிஷ் அரசு விரைவில் வெளியிடவுள்ளது.

விமர்சனம்

           பிரித்தி பட்டேல்

பல தசாப்தங்களுக்குப் பின்னர் கொண்டுவரப்படும் “முழுமையான சீர்சிருத்தம்” இது என அரசு கூறியுள்ளது.

எனினும், சர்வதேச அகதிகள் உடன்படிக்கையின் கீழ் பிரிட்டனுக்கு உள்ள கடமைகளை மீறும் விதத்தில் இந்த மாற்றங்கள் உள்ளதால், இவை “சட்டத்துக்குப் புறம்பானவை” என்று மனித உரிமை வழக்கரிஞர்கள் வாதிடுகின்றனர்.

இதேவேளை, இந்தத் திருத்தங்கள் குற்றக்கும்பல்களை தடுக்கப்போவதில்லை என்று எதிர்க்கட்சியான தொழிற்கட்சி கூறியுள்ளது.

ஆனால், இன்னொரு பாதுகாப்பான நாட்டின் வழியாக பிரிட்டனுக்குள் வருவோர் அந்த நாட்டிலேயே விண்ணப்பம் செய்வதே பொருத்தம் என்றும், பிரிட்டனுக்குள் வருவதற்கான வழியாக அந்த நாட்டை பயன்படுத்துவதை ஏற்க முடியாது என்றும் உள்துறைச் செயலர் பிரித்தி பட்டேல் கூறியுள்ளார்.

மக்கள் சட்டவிரோதமான வழிகளில் பிரிட்டனுக்குள் நுழைய முற்பட்டு பலியாவதைப் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது என்றும் பிரித்தி பட்டேல் தெரிவித்துள்ளார்.

2020 மார்ச்க்கு முந்தைய ஓராண்டில் 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பிரிட்டனில் தஞ்சம் கோரியுள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானவர்கள் இரான், அல்பேனியா, இராக் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள்.